கூவத்தூரில் அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தேனா? அதிமுக பிரமுகர் ஏ.வி.ராஜு மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் பரபரப்பு புகார்

சென்னை: நடிகைகளையும் என்னையும் தொடர்புபடுத்தி கூவத்தூரில் அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தேன் என்று அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கருணாஸ் சென்னை மாநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் நடிகராகவும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறேன். நடிகர் சங்க துணை தலைவராகவும் இருந்து வருகிறேன். அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு என்பவர் ஒரு பேட்டியில் பல்வேறு பொய்யான தகவலை என் மீது வன்மம் கொண்டு அவதூறாகவும், அருவருப்பாகவும், உண்மைக்கு மாறாகவும் செய்தியை பரப்பியுள்ளார். நடிகைகளையும் என்னையும் தொடர்புபடுத்தி கூவத்தூரில் அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தேன் என்று உண்மைக்கு மாறான பொய் செய்தியை விளம்பரத்துக்காக பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் இம்மியளவு கூட உண்மை இல்லாதபோதும் அந்த பேட்டியின் வீடியோ பல்வேறு தரப்பினரால் பகிரப்பட்டு தற்போது வைரலாகி உள்ளது. அதனை தொடர்ந்து பல யூடியூப் சேனலிலும் என்னை பற்றியும் நடிகை பற்றியும் பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். மேற்படி நபர் எந்த ஆதாரமும் இன்றி கொடுத்த பொய்யான பேட்டியால் என் பெயருக்கும், புகழுக்கும் சமுதாயத்தில் களங்கம் ஏற்படுத்தி உள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே மேற்படி நபர் மீது மற்றும் பல்வேறு யூடியூப் சேனல்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து மேற்படி வீடியோ பதிவுகளை நீக்க உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post கூவத்தூரில் அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தேனா? அதிமுக பிரமுகர் ஏ.வி.ராஜு மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Related Stories: