கடன் வரம்பை உயர்த்தக்கோரி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு: வழக்கை வாபஸ் பெறக்கோரிய ஒன்றிய அரசு மிரட்டுவதாக குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கடன் வரம்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காக ஒன்றிய அரசு தங்களை மிரட்டுவதாக கேரள நிதியமைச்சர் பாலகோபால் குற்றம் சாட்டியுள்ளார். கேரள மாநிலத்தின் உற்பத்தியை பொறுத்து அம்மாநில பொதுக்கடன் வாங்கும் வரம்பை 3.5% லிருந்து 2%ஆக ஒன்றிய அரசு குறைத்தது. இதனை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இப்பிரச்சனையில் தலையிட மறுத்ததுடன் கேரளா மற்றும் ஒன்றிய அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் இரு அரசுகளுக்கும் இடையே எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனிடையே இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது கேரள அரசு தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கேரள அரசு ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கேரள நிதியமைச்சர் பாலகோபால்;

கடன் வரம்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடியதற்காக ஒன்றிய அரசு மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். வழக்கை வாபஸ் பெற்றால் கடன் தொகையாக 12 ஆயிரம் கோடி ரூபாயை வாங்க உடனடி அனுமதி தருவதாக ஒன்றிய அரசு கூறுவதாகவும் குறிப்பிட்டார். அரசியல் சாசனத்திற்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுவதால் கடன் தொகை பெறும் வரை கேரள அரசு வழக்கை வாபஸ் பெறாது என்று திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.

The post கடன் வரம்பை உயர்த்தக்கோரி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு: வழக்கை வாபஸ் பெறக்கோரிய ஒன்றிய அரசு மிரட்டுவதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: