தமிழக – ஆந்திர எல்லை ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு

ஊத்துக்கோட்டை, பிப். 21: தமிழக – ஆந்திர எல்லையில் அமைந்துள்ள ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, அனைத்து வாகனங்களிலும் மருத்துவ குழுவினர் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவைக் காய்ச்சலால் நாளுக்குநாள் ஏராளமான கோழிகள் உயிரிழந்து வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி உள்ளிட்ட இடங்களிலும் பறவைகள் உயிரிழந்துள்ளன. இதனையடுத்து தமிழக – ஆந்திர எல்லை பகுதிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசனி தெளிக்கப்பட்டு பறவைக் காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் கும்மிடிப்பூண்டி கால்நடை மருத்துவர்கள் ஆந்திராவை ஒட்டியுள்ள எளாவூர் சோதனைச் சாவடியில் சிறப்பு முகாம் அமைத்து, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து, கிருமி நாசினி தெளித்து அனுப்புகின்றனர். இந்த பணியை கால்நடை மருத்துவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 3 ஷிப்ட்டுகளில் செய்து வருகின்றனர். பறைவைக் காய்ச்சல் எதிரொலியால் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கோழி இறைச்சி விலை சரிய தொடங்கியுள்ளது. கோழி இறைச்சியை வாங்க மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு மருத்துவத்துறை சார்பில் தமிழக – ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியிலும் நேற்று பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊத்துக்கோட்டை எல்லையில் ஆந்திர – தமிழக சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடி வழியாக தினந்தோறும் ஆந்திர மாநிலம் திருப்பதி, புத்தூர், நகரி, கடப்பா ஆகிய இடங்களில் இருந்தும், பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான லாரி மற்றும் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த வாகனங்கள் மூலமாக காய்கறிகள், இரும்பு உதிரி பாகங்கள் மற்றும் கறிக் கோழிகள் ஆகியவை சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஊத்துக்கோட்டையில் நடந்த நோய் தடுப்பு மருத்துவ முகாமில் மண்டல இணை இயக்குனர் பாலகிருஷ்ணன், உதவி இயக்குனர் பாஸ்கர், உதவி மருத்துவர்கள் ஜாகிர் அப்பாஸ், சபீனா பானு, கால்நடை ஆய்வாளர் சுப்பிரமணி, உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதி, புத்தூர், நாகலாபுரம், நகரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தனர். பறவைக் காய்ச்சல் எதிரொலியால் ஆந்திர எல்லை பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்படுவதால் திருவள்ளூர் மாவட்ட மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

The post தமிழக – ஆந்திர எல்லை ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு appeared first on Dinakaran.

Related Stories: