திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ₹1.52 கோடி: தங்கம் 790 கி., வெள்ளி 14,650 கி.

திருத்தணி, ஜூலை 26: திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 23 நாட்களில் ₹1.52 கோடி ரொக்கம், 790 கிராம் தங்கம் ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து கோயிலில் உள்ள உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் திருக்கோயில் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அருணாசலம் தலைமையில் மலைக்கோயில் தேவர் மண்டபத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் உண்டியல்கள் திறக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் காணிக்கை எண்ணும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். காலை முதல் இரவு 10 மணி வரை நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியின் முடிவில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய விவரம் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 23 நாட்களில் ₹1 கோடி 51 லட்சத்து 90 ஆயிரத்து 233 ரொக்கம், 790 கிராம் தங்கம், 14 ஆயிரத்து 650 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

The post திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ₹1.52 கோடி: தங்கம் 790 கி., வெள்ளி 14,650 கி. appeared first on Dinakaran.

Related Stories: