ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக கூறி ₹65.98 கோடி மோசடி செய்தவர் கைது: மேலும் ஒருவருக்கு வலை

ஆவடி, பிப். 21: ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அமீன் (44). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த விஜய் (41) மற்றும் கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (42) ஆகிய இருவரும் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் ஆன்லைன் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்கள் 7 நாடுகளில் ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் செய்வதாகவும், ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 4 சதவீதம் வட்டி அளிப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும் ஒரு நபரை சேர்த்து விட்டால் 10% கமிஷன் தருவதாகவும் கூறினர்.

அதன் பேரில், எனது நண்பர்கள், உறவினர்கள் என 110 நபர்களை ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் சேர்த்தேன். இதில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்து மொத்தம் 450 பேருக்கு மேல் ₹65.98 கோடி பணத்தை முதலீடு செய்துள்ளனர். இந்த பணத்தை விஜய் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகிய இருவரும் கிரிப்டோ கரன்சியாக மாற்றி, நண்பர்களான ரவிக்குமார், சந்தோஷ் மூலம் போலியான ஆன்லைன் ஆப் ஒன்றை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். அதன் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவின் பேரில் கூடுதல் துணை ஆணையாளர் ஸ்டீபன், துணை ஆணையர் பெருமாள் தலைமையில் ஆய்வாளர் சுபாஷினி மற்றும் காவலர்கள் சுந்தரமூர்த்தி மற்றும் விஜயை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த விஜயை நேற்று கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுந்தரமூர்த்தியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக கூறி ₹65.98 கோடி மோசடி செய்தவர் கைது: மேலும் ஒருவருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: