உதவித்தொகை உயர்த்தக்கோரி பார்வையற்றோர் சாலை மறியல்

திருச்சி, பிப்.21: திருச்சி தெப்பக்குளம் பேருந்து நிறுத்தும் அருகே மாவட்ட பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது. சங்க தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். பொது செயலாளர் சந்திரசேகர் கண்டன உரையாற்றினார். மாதாந்திர உதவித்தொகை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை தனியாக பிரித்து வழங்கும் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். பேருந்து நிலையம், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், அரசு பொது வணிக வளாகங்களில் நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் கடைகளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 10 சதவீதம் ஒதுக்க வேண்டும். ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து பார்வையற்றவர்களுக்கும், நீண்ட காலமாக அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் பார்வையற்றவர்களுக்கும் உடனே நிரந்த பணிவாய்ப்பு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை கூட்டுறவு அங்காடி மூலம் அனைத்து ரேசன் கடைகளிலும் விற்பனை செய்ய வழி வகுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மறியலில் ஈடுபட்ட பொருளாளர் வரதராஜன் உட்பட 100 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

The post உதவித்தொகை உயர்த்தக்கோரி பார்வையற்றோர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: