அம்மையார்குப்பம் கிராமத்தில் பச்சையம்மன் ஆலய கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

பள்ளிப்பட்டு: அம்மையார்குப்பம் கிராமத்தில் ஸ்ரீ பச்சையம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பத்தில் மன்னாதீஸ்வரர் சமேத ஸ்ரீ பச்சையம்மனுக்கு புதிதாக கோயில் கட்டப்பட்டு, கும்பாபிஷேக விழாவையொட்டி ஆலயம் மற்றும் கிராம முக்கிய வீதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி பூஜையுடன் தொடங்கிய மஹா கும்பாபிஷேக விழாவில் நவக்கிரக ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி உட்பட 4 கால ஹோம பூஜைகள் நடைபெற்றன.

நேற்று காலை மஹாபூர்ணாஹூதி ஹோம பூஜைகள் தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க ஆலய வளாகத்தில் பக்தர்கள் கூடியிருக்க புனிதநீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து கலசநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டபோது ஓம் சக்தி முழக்கங்களுடன் அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

ஆலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேக விழாவில் நேற்று முன்தினம் இரவு பின்னணி பாடகர் மனோ இசை குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை மூர்த்தி கச்சீஸ்வரர் மரபினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

The post அம்மையார்குப்பம் கிராமத்தில் பச்சையம்மன் ஆலய கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: