குறுந்தொழில் நிறுவனங்கள் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

 

சிவகங்கை, பிப்.18: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:ஒன்றிய அரசின் 60சதவீத நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், மீன் மற்றும் இறால் கொண்டு செய்யப்படும் ஊறுகாய், அரிசி ஆலை, இட்லி, தோசைக்கான மாவு தயாரித்தல், மரச்செக்கு எண்ணெய், பேக்கரிப் பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைத் தின்பண்டங்கள் தயாரித்தல்,

செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரித்தல் மற்றும் சாம்பார் பொடி, இட்லிப்பொடி போன்ற மசால்வகை பொடிகள் தயாரித்தல் மற்றும் காப்பிக் கொட்டை அரைத்தல், பால் பொருட்கள் தயாரித்தல், இறைச்சி வகைகள் பதப்படுத்தல் போன்ற தொழில்களைத் தொடங்கவும், குறுந்தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தல், தொழில்நுட்ப ஆலோசனைகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, திட்ட அறிக்கை தயாரிக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

ரூ.1 கோடி வரையிலான உணவுப் பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெறத்தகுதி பெற்றவை. திட்டத் தொகையில் 10சதவீதம் முதலீட்டாளர் பங்காகவும், 90சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாக் கடனாக வழங்கப்படும். இத்திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்டத் தொழில் மையங்கள் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது. கூடுதல் விவரங்கள் பெற மாவட்ட தொழில் மையத்தில் நேரடியாகவோ அல்லது 04575-240257என்ற தொலை பேசி எண் வழியாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குறுந்தொழில் நிறுவனங்கள் பயன்பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: