கலசப்பாக்கம் செய்யாற்றில் இன்று அண்ணாமலையார் திருமாமுடீஸ்வரருக்கு தீர்த்தவாரி

கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் ரத சப்தமி நாளில் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது திருவண்ணாமலையில் உள்ள உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், கலசப்பாக்கத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் சுவாமி தீர்த்தவாரியில் எழுந்தருள்வார்கள்.

அதன்படி இன்று ரத சப்தமியொட்டி கலசப்பாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி திருவண்ணாமலையில் இருந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் செய்யாற்றுக்கு புறப்பட்டார். அப்போது, துரிஞ்சாபுரம் ஒன்றியம் நாயுடுமங்கலம் கிராமத்தில் சுவாமிக்கு பக்தர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து தனகோட்டிபுரம் கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை சுவாமி வலம் வந்தார். அங்கு ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்திற்கு வந்த அண்ணாமலையாரை பக்தர்கள் வரவேற்றனர்.

அதேபோல் தீர்த்தவாரியில் பங்கேற்பதற்காக கலசப்பாக்கத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் சுவாமி செய்யாற்றுக்கு வந்தார். அங்கு அண்ணாமலையாரும், திருமாமுடீஸ்வரரும் நேருக்கு நேர் சங்கமித்தனர். தொடர்ந்து செய்யாற்றில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் அண்ணாமலையார், திருமாமுடீஸ்வர் மெகாபந்தலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

The post கலசப்பாக்கம் செய்யாற்றில் இன்று அண்ணாமலையார் திருமாமுடீஸ்வரருக்கு தீர்த்தவாரி appeared first on Dinakaran.

Related Stories: