கடக ராசி பொதுப் பண்புகள்

தியாகத் திருமணி

கடக ராசியின் அதிபன் சந்திரன் என்பதால், கடக ராசிக் காரர், மிகவும் உணர்ச்சிவசப் படுபவர்களாகவும், மென்மையானக் குணம் படைத்தவர்களாகவும் அதிகளவில் சென்டிமென்ட் பார்க்கின்றவராகவும் இருப்பர். இந்த ராசி ஜூன் 21 முதல் ஜூலை 22 வரையில் பிறந்தவர்களுக்கான ராசியாகும். தமிழ் மாதத்தில், ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கான ராசி ஆகும்.

கடக ராசியினரின் நற்பண்புகள்

தெய்வபக்தி, பெரியவர்கள் மீது மரியாதை, குழந்தைகள் மீது அன்பு, சமூகத்தின் மீதான பயம் ஆகியவை இவர்களிடம் நிறைந்து இருக்கும். கடக ராசிக் காரர்கள், பெரிய தியாகிகள். அன்னியருக்காகக் கூட தியாகம் செய்வார்கள். பாசக்காரர்கள், பாசத்துக்கும், பழக்கத்திற்கும் உயிரைக் கூட கொடுப்பார்கள். குரலை உயர்த்திப் பேச மாட்டார்கள். ஆனால், கருத்தை உறுதியாகச் சொல்வார்கள். அவர்கள் சொன்னால், சொன்னதுதான் அதை மாற்றி எழுத பிரம்மனாலும் இயலாது.

கோபமும் விளைவும்

கடக ராசிக்காரர்கள் திடீரென்று கோபித்துக் கொண்டுப் பல நாட்கள், மாதங்கள், ஆண்டுகள்கூட பேசாமல் இருப்பதுண்டு. இவர்களுடைய கோபத்தை அமைதியாகத்தான் காட்டுவார்களேத் தவிர, அடிதடியில் காட்டத் தெரியாது. எதிர்பாராதச் சின்னஞ்சிறு விஷயங்களில்கூட இவர்கள் மிகவும் சென்சிட்டிவாக இருந்து கோபித்துக் கொள்வார்கள். அதனால், இவர்களுடன் பழகுவது மிகவும் சிரமமான காரியம். பலருக்கும் இவர்களைப் புரிந்துகொள்ள முடியாது.

உத்தமரத்தினம்

12 ராசிகளிலும் அதிக அளவிற்கு நேர்மையும், விஸ்வாசமும், உண்மையும், வாய்மையும் உடையவர்கள் கடக ராசியினர் எனலாம். சட்டென்று யாரிடமும் ஒட்டிக் கொள்வர். உயிருக்கு உயிராகப் பழகிப் பிரிய முடியாமல் தவிப்பர். மிதுன ராசிக்காரர் போல, பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் பழக இவர்களுக்குத் தெரியாது. உடல், பொருள், ஆவி அத்தனையும் தத்தம் செய்யும் அளவுக்கு முழு ஆத்தும ஈடுபாட்டுடன் பழகுவர்.

அமைதியின் சிகரம்

கடக ராசிக்காரர், சத்தம் போட்டுச் சிரிக்கவும், சத்தம் போட்டு அழவும்கூட தயங்குவர். படங்களில் காமெடி சீன் வந்தால்கூட இவர்களுடைய சிரிப்புச் சத்தத்தைக் கேட்க இயலாது.

சவால்

வாழ்க்கையின் சிக்கலானக் காலகட்டத்தில், கடக ராசி ஆண்களும், பெண்களும் உறுதியான முடிவெடுத்துப் பொறுமையாகத் திறமையாகச் செயல்படுவார்கள். அப்போதுதான் இவர்களுக்குள் இருக்கும் மன உறுதியும், திட்டமிட்டச் செயல்பாடும் வெளிப் படும். பொருந்தும் ராசிகள் சந்திரராசிக் காரரான இவருக்கு குருவின் ராசிக்காரர்களான தனுசு மற்றும் மீனம் பழகுவதற்கும், திருமணம் செய்வதற்கும், நட்புக் கொண்டாடுவதற்கும் இணக்கமான ராசிகள் ஆகும். குருவின் ராசியும் சந்திரனின் ராசியும் இணைந்துச் செல்லும்போது, அவர்களுக்குள் குரு சந்திரயோகமும் ஏற்படும்.

பொறுப்புணர்ச்சி

ஒரு குடும்பத்தில், கடக ராசிக்காரர் மூத்தவராக இருந்தால், தன் இளையச் சகோதரச் சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைத்து, அவர்களுக்கான குடும்பக் கடமைகளை முடித்துவிட்டுதான், தான் திருமணம் செய்துக் கொள்வார்.

குடும்பம் ஒரு கோயில்

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், பெரும்பாலும், கடக ராசிக்காரர்கள், வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பதே விரும்புவார்கள். தன்வீடு, தன்கடை, தன் தொழிற்சாலை என்று, தான் சார்ந்த, தன் குடும்பம் சார்ந்த தொழில் செய்வதையே விரும்புவார்கள்.

கற்பனையும் கலாரசனையும்

நிறையக் கற்பனை வளமுடைய இவர்களில் சிலர், எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும் இருக்கின்றனர். வெளிச்சத்துக்கு வராத வீட்டில் பூச்சிகளாக இருப்பர். பொதுவாக இவர்கள், அன்பு, பொருள், ஆசை, காதல், எதுவாக இருந்தாலும், பிறருக்குக் கொடுத்து, அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைக் காண்பதையே தங்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருப்பார்கள். அடுத்தவரிடம் இருந்துப் பிடுங்கிக் கொள்ளும் எண்ணம் இவருக்கு எப்போதும் வராது. மாறாக, அடுத்தவர்களிடமிருந்து மிகுந்த அன்பையும், பாதுகாப்பையும் எதிர்பார்ப்பார்கள்.

வாழ்க்கைத் துணை

மிகுந்த பொசசிவ்னஸ் இருக்கும். இதனால், இவர்களை திருமணம் செய்தோர், படாதப் பாடுப் படுவார்கள். அதிகளவில் தன்னை பற்றிக் குறைவாக மதிப்பிட்டுத் தன்னைத்தானே நொந்துக் கொண்டு, சுய இரக்கம், சுய பச்சாதாபம், அழுகை, புலம்பல், மனக்குமுறல் என்று வாழ்வதுண்டு. இவர்களின் பொதுவான எதிர்பார்ப்பு என்னவென்றால், குடும்பத்தினரும், நண்பரும், வாழ்க்கைத் துணையும் ஒவ்வொரு சிறு விஷயத்துக்கும் பாராட்ட வேண்டும். வாய் திறந்து ஒரு முறைக்கு இரண்டு முறைப் பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். குழந்தையைப் போல, கொஞ்ச வேண்டும். வேறு என்னென்ன வகையில் அன்பு செலுத்த முடியுமோ, அத்தனை வகையிலும் அன்பு செலுத்த வேண்டும். 

பெண்கள்

கடக ராசிப் பெண்கள், பெரும்பாலும் வெளிவேலைக்குச் செல்ல விரும்பமாட்டார்கள். தமது வீட்டிலேயே இருந்து, என்னென்ன தொழில்கள் செய்ய முடியுமோ, அத்தனையும் அழகாக திறமையாகப் பொறுமையாகச் செய்வார்கள். இவர்கள் வீட்டில், தாய், தந்தை இருந்தாலும், மாமனார், மாமியார் இருந்தாலும், தாமாகவே அக்குடும்பத்தின் பொறுப்புகளை விரும்பிச் சுமப்பர்.

The post கடக ராசி பொதுப் பண்புகள் appeared first on Dinakaran.

Related Stories: