சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை பிரச்னை ஆர்.பி.உதயகுமாருக்கு முன் வரிசையில் இடம்: முதல்வர் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை பிரச்னை தொடர்பாக கேள்வி நேரத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமாருக்கு முன் வரிசையில் இடம் அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், ஜீரோ அவரில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை குறித்து 4 முறை சபாநாயகரை சந்தித்து எங்களது அதிமுக உறுப்பினர்கள் கடிதம் கொடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக உள்ள மரபை பின்பற்றி எதிர்க்கட்சி தலைவர் அருகே, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஒதுக்கி தர வேண்டும். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்துள்ளோம். அதனால் அவருக்கு முன் வரிசையில், எனது இருக்கை அருகே இடம் ஒதுக்கி தர வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமாருக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்பது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து பேரவையில் பேசி வருகிறார். நீங்களும் (சபாநாயகர்) இது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு உட்பட்டது என்று சொல்லி வருகிறீர்கள். இதற்கு உதாரணமாக அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால் எடுத்த தீர்மானத்தை சுட்டிக் காட்டி உள்ளீர்கள். இருந்தாலும், நான் சபாநாயகருக்கு ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். இந்த பிரச்னையில் சபாநாயகர் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக எடுத்த முடிவை, மறு பரிசீலனை செய்து எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று உரிமையோடு கோரிக்கை வைக்கிறேன்.

அப்பாவு(சபாநாயகர்): நிச்சயமாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கை அருகே அமர்ந்துள்ள பன்னீர்செல்வம் இருக்கையை எங்கு மாற்றலாம் என்பது குறித்து, இன்று மாலைக்குள் முடிவு செய்து நாளைக்குள் இதுகுறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

The post சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை பிரச்னை ஆர்.பி.உதயகுமாருக்கு முன் வரிசையில் இடம்: முதல்வர் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: