காங்கிரசில் இருந்து விலகிய அடுத்த நாளே அதிரடி… பாஜகவில் இணைந்த அசோக் சவான்.. மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்!!

மும்பை : காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகிய அசோக் சவான், பாஜகவில் இணைந்தார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாபா சித்திக், மில்லிந்த் தியோரா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து மாநில முன்னாள் முதல்வரும், எம்எல்ஏவுமான அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

இதேபோல் தனது எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். சட்டமன்ற சபாநாயகர் ராகுல் நார்வேகரிடம் தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் சமர்பித்துள்ளார். 2008 டிசம்பரில் இருந்து 2010 நவம்பர் வரை மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முதலமைச்சராக பதவி வகித்தவர் அசோக் சவான். முதல்வராக இருந்த சவான் ஆதார்ஷ் வீடு முறைகேடு ஊழல் குற்றச்சாட்டில் 2010ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்.சவான் 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சவான் அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பாஜவில் இணைந்தார். அவருக்கு தேவேந்திர பட்னாவிஸ் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவரை வரவேற்றுப் பேசிய தேவேந்திர பட்னவிஸ், “மகாராஷ்டிராவின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்வு செய்யப்பட்டவரும், இரண்டு முறை மகாராஷ்டிர முதல்வராகவும் இருந்த அசோக் சவான் பாஜகவில் இணைந்துள்ளார். இது மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது” என குறிப்பிட்டார்.பாஜக சார்பில் மராட்டியத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அசோக் சவான் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post காங்கிரசில் இருந்து விலகிய அடுத்த நாளே அதிரடி… பாஜகவில் இணைந்த அசோக் சவான்.. மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்!! appeared first on Dinakaran.

Related Stories: