பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை சீர் செய்ய நடவடிக்கை

தர்மபுரி, பிப்.13: தர்மபுரி மாவட்டம், மல்லிகுட்டை அருகே உள்ள காமலாபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க முன்னாள் துணைத் தலைவர் பெரியண்ணன்(56), நேற்று தர்மபுரி கலெக்டர் சாந்தி மற்றும் தர்மபுரி பால்வள துணைப்பதிவாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:காரிமங்கலம் வட்டம், காமலாபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் 293 உறுப்பினர்கள் உள்ளனர். தினசரி சுழற்சி முறையில் குறைந்தது 100 உறுப்பினர்கள் 1000 லிட்டர் பால் விற்பனை செய்து வந்தனர். தற்போது, நாள் ஒன்றுக்கு 15 உறுப்பினர்களிடமிருந்து சுமார் 100 லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நிர்வாக சீர்கேடுகளால், கடந்த 40 ஆண்டுகளாக சங்கத்திற்கு பால் வழங்கி வந்த உறுப்பினர்கள் அனைவரும், தனியார் நிறுவனத்திற்கு பால் விற்பனை செய்யும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், நிதியிழப்பு மற்றும் நிர்வாக சீர்கேடுகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. சங்க நிர்வாகத்தை சீர்செய்ய கோரி மேற்பார்வையாளர்கள் மற்றும் நிர்வாக மேலாளருக்கு பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக சங்கம் நிதியிழப்பு மற்றும் நிர்வாக சீர்கேடுகளால் நலிவடைந்துள்ளது. எனவே, சிறப்பு தணிக்கையாளர்கள் மூலம் தணிக்கை செய்து, சங்கத்தில் நிதியிழப்பிற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, சங்கத்திற்கு வரவேண்டிய வருவாயை வசூலித்து, உறுப்பினர்களுக்கு போனசாக வழங்க வேண்டும். 2021ம் ஆண்டு உறுப்பினர்களுக்கு ₹7 லட்சத்து 99 ஆயிரத்து 32 வழங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை உறுப்பினர்களுக்கு வழங்கவில்லை. எனவே, உறுப்பினர்களுக்கு நிதி வழங்க வேண்டும். நலிவடைந்த இந்த சங்கத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை சீர் செய்ய நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: