2 லட்சம் குடும்பங்களுக்கு நில உரிமை, வாழ்விட உரிமை உறுதி செய்யும் வகையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை தொடர்ந்து செயல்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பட்டா வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளில் இதுபற்றிய பிரச்னைகளை கூறினர். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

ஏற்கெனவே வீடு கட்டிக் குடியிருக்கும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் ‘இ-பட்டா’க்களை வழங்கி இருக்கிறோம். இவை தவிர, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளிம்பு நிலை மக்களின் குடும்பங்களுக்கு, காலி மனைப் பட்டா வழங்கியுள்ளது அரசு. நத்தம் நிலப் பட்டாக்கள் கணினியில் ஏறாமல் இருந்தன. 300 வருவாய் வட்டங்களில் இந்த நத்தம் பட்டா இருக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு கோடியே 40 லட்சம் பட்டாக்கள். இவற்றில் 121 வருவாய் வட்டங்களில் இணைய வழியில் பட்டா மாறுதலை நாம் செய்து முடித்துள்ளோம்.

மீதியுள்ள வருவாய் வட்டங்களில் உள்ள நத்தம் பட்டாக்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் இணையத்தில் ஏற்றி முடிக்கப்படும். ஆலந்தூர், மதுரவாயல், சோழிங்கநல்லூர், மாதவரம் எனப் புறநகரங்கள் சென்னையுடன் இணைக்கப்பட்ட இந்தப் பகுதிகளுக்கு ‘டவுன் செட்டில்மென்ட்’ எனப்படும் நகர நில அளவுத் திட்டம் நடந்து கொண்டுள்ளது. இதில் 3 லட்சத்து 20 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரம் தான் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

மீதமுள்ள பட்டாக்கள் விரைவில் வழங்குவதுதான் அரசினுடைய நோக்கம். இந்த ஆலோசனைக் கூட்டம் நிச்சயம் 2 லட்சம் குடும்பங்களின் நீண்ட நாள் பிரச்னைக்குத் தீர்வு காண வைக்கப்படும் தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. முதல்வர் அறிவுரையைப் பெற்று 2 லட்சம் குடும்பங்களுக்கும் நில உரிமையும், வாழ்விட உரிமையும் உறுதி செய்யும் வகையில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை அளிக்கிறேன் என்று கூறினார்.

The post 2 லட்சம் குடும்பங்களுக்கு நில உரிமை, வாழ்விட உரிமை உறுதி செய்யும் வகையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை தொடர்ந்து செயல்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: