பென்னலூர் ஊராட்சியில் மண் திருட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்: காவல் நிலையத்தில் மண் கொட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர்: பென்னலூர் ஊராட்சியில் மண் திருட்டை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் திருட்டு மண் கொட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பென்னலூர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊராட்சியில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி அரசுக்குச் சொந்தமாக 10 ஏக்கர் பரப்பளவில் புறம்போக்கு நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி 6 அடி ஆழத்திற்கு மண்ணை தோண்டி லாரிகள் மூலம் கொண்டு சென்று, தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். காலி நிலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டி மண் எடுக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மணல் கொள்ளை நடப்பது குறித்து காவல்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய வளாகம் பள்ளம் மேடாக காணப்படுகிறது.

இதனை சமன் செய்ய போலீசாருக்கு மண் தேவைப்பட்டுள்ளது. இதனையறிந்த மண் கொள்ளையர்கள், பென்னலூர் பகுதியில் இருந்து லாரிகள் மூலம் திருட்டு மண் எடுத்து வந்து, அதனை ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கொட்டி விற்பனை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

The post பென்னலூர் ஊராட்சியில் மண் திருட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்: காவல் நிலையத்தில் மண் கொட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: