சன்ரைசர்ஸ் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன்: டர்பன்’ஸ் சூப்பர் ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி எஸ்ஏ20 தொடரில் அசத்தல்

கேப் டவுன்: எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரின் பைனலில் டர்பன்’ஸ் சூப்பர் ஜயன்ட்ஸ் அணியை 89 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. ஐபிஎல் டி20 தொடரைப் போல தென் ஆப்ரிக்காவில் நடக்கும் எஸ்ஏ20 தொடரின் 2வது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், டர்பன்’ஸ் சூப்பர் ஜயன்ட்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், பிரிடோரியா கேப்பிடல்ஸ், எம்ஐ கேப் டவுன் ஆகிய 6 அணிகள் களமிறங்கி பலப்பரீட்சை நடத்தின. கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கி நடந்த லீக் சுற்று மற்றும் பிளே ஆப் சுற்று ஆட்டங்களின் முடிவில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பரபரப்பான பைனலில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் – டர்பன்’ஸ் சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் மோதின. கேப் டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன் தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ஜார்டன் ஹெர்மன், டேவிட் மலான் இணைந்து சன்ரைசர்ஸ் இன்னிங்சை தொடங்கினர். மலான் 6 ரன்னில் வெளியேற, ஹெர்மன் – டாம் அபெல் ஜோடி 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 90 ரன் சேர்த்தது.

கேஷவ் மகராஜ் வீசிய 11வது ஓவரில், ஹெர்மன் 42 ரன் (26 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), டாம் அபெல் 55 ரன் (34 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், கேப்டன் மார்க்ரம் – டிரைஸ்டன் ஸ்டப்ஸ் இணைந்து அதிரடியாக விளையாட, சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது. மார்க்ரம் 42 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்டப்ஸ் 56 ரன்னுடன் (30 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டர்பன் சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்கியது. சன்ரைசர்ஸ் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய சூப்பர் ஜயன்ட்ஸ், 17 ஓவரில் 115 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. வியான் முல்டர் 38, பிரிடோரியஸ் 28, பிரீட்ஸ்கே 18, ஜூனியர் டாலா 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் மார்கோ யான்சென் 4 ஓவரில் 30 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். டேனியல் வொர்ரல், ஓட்னீல் பார்ட்மேன் தலா 2, ஹார்மர் 1 விக்கெட் வீழ்த்தினர். 89 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி எஸ்ஏ20 கோப்பையை தக்கவைத்தது. சன்ரைசர்ஸ் வீரர் டாம் அபெல் ஆட்ட நாயகன் விருதும், சூப்பர் ஜயன்ட்ஸ் வீரர் ஹெய்ன்ரிச் கிளாசன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

 

The post சன்ரைசர்ஸ் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன்: டர்பன்’ஸ் சூப்பர் ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி எஸ்ஏ20 தொடரில் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: