லாடபுரம் பொக்குனி ஆற்றின் குறுக்கே ரூ.1.76 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டும் பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர்,பிப்.11: பெரம்பலூர் மாவட்ட நீர் வளத்துறை சார்பில் லாடபுரம் பகுதியில் பொக்குனி ஆற்றின் குறுக்கே ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணி. மாவட்ட கலெக்டர் கற்பகம், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் அரும்பாவூர் பெரிய ஏரி, சித்தேரி, வெங்கலம் பெரிய ஏரி, வெண்பாவூர் ஏரி, பாண்டகப்பாடி ஏரி, தொண்டமாந்துறை ஏரி, பூலாம்பாடி ஏரி என மொத்தம் 73 ஏரிகள், 33 தடுப்பணைகள், மற்றும் வேப்பந்தட்டை தாலுகாவில் விசுவக்குடி அணைக்கட்டு, ஆலத்தூர் தாலுகாவில் கொட்டரை அணைக்கட்டு ஆகிய 2 அணைக்கட்டுகள் உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக சட்ட மன்றக் கூட்டத்தில் நடைபெற்ற நீர்ப் பாசனத்துறை கோரிக்கையின் போது, தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர், பெரம்பலூர் வட்டம், இலாடபுரம் கிராமத்தில் பொக்குனி ஆற்றின் குறுக்கே ரூ.1 கோடியே, 76 லட்சத்து, 60 ஆயிரம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை அறிவித்தார்.

அந்த அறிவிப்பினை தொடர்ந்து 2023 செப்-11 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் புதிய தடுப்பணை கட்டும் பணிகளைத் தொடங்கி வைத்தனர். லாடபுரம் கிராமத்திலுள்ள கோனேரி ஆறு மற்றும் பொக்குனி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுவதால் கோனேரி ஆறு மற்றும் பொக்குனியாற்றின் நீரானது வீணாவதை தடுப்பதுடன், தடுப்பணையை சுற்றியுள்ள பகுதியில் 76 கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து மறைமுக ஆயக்கட்டு 315.20 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைவதுடன் குடிநீர் ஆதாரமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன், உதவிசெயற் பொறியாளர் சரவணன், லாடபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post லாடபுரம் பொக்குனி ஆற்றின் குறுக்கே ரூ.1.76 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டும் பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: