பல்வேறு முறைகேடுகளை உறுதி செய்தது விசாரணை குழு பெரியார் பல்கலை. பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய அதிரடி உத்தரவு: துணைவேந்தருக்கு உயர்கல்வித்துறை செயலாளர் கடிதம்

சேலம்: கொள்முதல் உள்பட பல்வேறு முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதால், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய துணைவேந்தர் ஜெகநாதனுக்கு, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை சந்தித்தது. குறிப்பாக, பணி நியமனம் முதல் பல்கலைக்கழகத்திற்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்தது வரை பல்வேறு விவகாரங்களில் ஊழலும், முறைகேடுகளும் நடந்தன.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த, கடந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி அரசு கூடுதல் செயலாளர் பழனிசாமி, இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் அடங்கிய விசாரணைக்குழுவை அமைத்து, உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. இதில், பல்கலைக்கழகத்தில் நடந்த 13 முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக வந்த விசாரணைக்குழுவினர், முறைகேடு, ஊழல் தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்றனர். பின்னர், புகார்தாரர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குழுவின் அறிக்கை சமீபத்தில் உயர்கல்வித்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், பதிவாளர் தங்கவேல் மீதான 8 குற்றச்சாட்டுகள் உறுதியாகியுள்ளன. அதன் அடிப்படையில் பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய, துணைவேந்தர் ஜெகநாதனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு முதன்மை செயலாளர் கார்த்திக், துணைவேந்தர் ஜெகநாதனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள் மீது, அப்பல்கலைக்கழகத்தின் பணியாளர் நியமனம், பொருட்கள் கொள்முதல் ஆகியவற்றில் முறைகேடுகள் புகார் குறித்து விசாரணை குழு விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, கணினி அறிவியல் துறைத்தலைவர் தங்கவேலின் பணி நியமனம், உள்ளாட்சி தணிக்கைத் துறையின் தடையில் இடம்பெற்று, அதனை நீக்கியது சட்டப்படி தவறானது.

பதிவாளர் பொறுப்பில் இருக்கும்போது தன்னுடைய துறைக்கு தேவையான அனைத்து அறைகலன்களும், ஒரே நிறுவனத்தில் கொள்முதல் செய்தது மற்றும் அவ்வாறு வாங்கிய அறைகலன்களுக்கு ஒரே ரசீதுக்கு, இரண்டு முறை பணம் பெற்றது குறித்து, கடந்த 2019-20ம் நிதியாண்டில் உள்ளாட்சி நிதித் தணிக்கையில் தடை எழுப்பப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டுள்ளதுடன், உள்ளாட்சி நிதி சிறப்பு தணிக்கைத்துறை நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் வை-பை நிறுவுதல், பராமரித்தல், அதற்கான ஹார்டுவேர் முறைகேடுகள் மற்றும் சாப்ட்வேர் கொள்முதலில் தொடர்ந்து முறைகேடுகள், கடந்த ஆண்டுகளில் கணிப்பொறி, இணையம், ஆட்டோமேசன், வெப் சர்வீஸ்கள் கொள்முதலில் நிதி முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கணினி அறிவியல் துறைத் தலைவரும், கணினி மைய இயக்குநருமான தங்கவேல், கணிப்பொறி கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல் மற்றும் உயர் கட்டமைப்பு (அதிக திறன்) கொண்ட கணிப்பொறிகளின் விவரங்களைக் குறிப்பிட்டு விலைப்புள்ளிகள் கோரப்பட்டு, குறைந்த திறனுள்ள கணிப்பொறிகளையே கொள்முதல் செய்துள்ளதில் பெரும் ஊழல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் பல மென்பொருட்களை, கணினிகளை முறைகேடாக தமிழ்நாடு அரசின் விதிகளை மீறி கொள்முதல் செய்ததில் நிதி இழப்பு மற்றும் ஊழல் செய்ததும், கணினி அறிவியல் துறைக்கு ஒதுக்கிய நிதியை, விதிகளை மீறி தவறாக பயன்படுத்தியது மற்றும் தேவைக்கு அதிகமாக கணினிகள் கொள்முதல் செய்ததில் நிதி முறைகேடுகள் நிரூபணமாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த நிறுவனத்திடம் சாப்ட்வேர் வாங்கப்பட்டு, இன்றுவரை செயல்படாமல் உள்ளதும், ஆதிதிராவிட இளைஞர்களுக்கு நடத்தப்படும் ஸ்கில் கோர்ஸ்களில் பெரும் முறைகேடுகள், விதிமீறல்கள், முறைகேடான கொள்முதல்கள் நிரூபணமாகியுள்ளது.

இதேபோல், டெபிட் கார்டு வாங்கப்பட்டு செலவுகள் மேற்கொள்ளப்பட்டதும், பல்கலைக்கழக பணிகள் அவுட்சோர்சிங் முறையில் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்ளாட்சி நிதி சிறப்பு தணிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. விசாரணைக்குழுவால் அளிக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கையில், பேராசிரியர், கணினி அறிவியல் துறைத்தலைவர் மற்றும் பதிவாளர் தங்கவேல் மீதான நிரூபணமான குற்றச்சாட்டுகள் மிக கடுமையானது என அரசு கருதுகிறது.

இதனிடையே, பதிவாளர் தங்கவேல், வயது முதிர்வு காரணமாக வரும் 29.02.2024 அன்று பணி ஓய்வு பெறவுள்ளார். அதேசமயம், விசாரணைக்குழு அளித்துள்ள பதிவாளர் தங்கவேல் மீதான நிரூபணமான குற்றச்சாட்டுகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. எனவே, பதிவாளர் தங்கவேலுவை பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்காமல், பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரியார் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிரூபணமான 8 குற்றச்சாட்டுகள்
1. பதிவாளர் தங்கவேலின், பணிநியமனம் தொடர்பான தணிக்கை தடையை நீக்கியது.
2. தனது துறைக்கு தேவையான பொருட்களை ஒரே நிறுவனத்தில் வாங்கியதுடன், ஒரே ரசீதுக்கு 2 முறை பணம் பெற்றது.
3. வை-பை நிறுவுதல், பராமரித்தல், ஹார்டுவேர், சாப்ட்வேர் கொள்முதல், கணினி, ஆட்டோமேசன் ஆகியவற்றில் முறைகேடு.
4. அதிக திறன் கொண்ட கணினிக்கு விலைப்புள்ளி கோரப்பட்டு, குறைந்த திறன் கொண்ட கணினியை கொள்முதல் செய்து ஊழல். இதில், அரசின் விதிகளை மீறியதுடன், நிதியை தவறாக பயன்படுத்தியது.
5. சென்னையைச் சேர்ந்த நிறுவனத்திடம் சாப்ட்வேர் வாங்கி, இன்றுவரை செயல்படாமல் உள்ளது.
6. ஆதிதிராவிட இளைஞர்களுக்கான ஸ்கில் கோர்ஸ்களில் முறைகேடு.
7. டெபிட் கார்டு வாங்கி, செலவுகள் மேற்கொள்ளப்பட்டது.
8. பல்கலைக்கழக பணிகளை அவுட்சோர்சிங் முறையில், சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மூலம் மேற்கொண்டதில் முறைகேடு.

The post பல்வேறு முறைகேடுகளை உறுதி செய்தது விசாரணை குழு பெரியார் பல்கலை. பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய அதிரடி உத்தரவு: துணைவேந்தருக்கு உயர்கல்வித்துறை செயலாளர் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: