எட்டியம்மன் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் பெரணமல்லூர் பேரூராட்சியில்

பெரணமல்லூர், பிப்.9: பெரணமல்லூர் எட்டியம்மன் கோயில் சுமார் 25 அடி உயரம் கொண்ட புதிய தேர் வெள்ளோட்ட பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாடவீதி வழியே வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சியில் மிகவும் பழமை வாய்ந்த எட்டியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அம்மனை கிராம தேவதையாக பொதுமக்கள் வணங்கி வருகின்றனர். இந்நிலையில் கோயில் நிர்வாக குழுவினர் மற்றும் பொதுமக்கள் அம்மனுக்கு புதிய தேரினை வடிவமைத்து அம்மனை தேரில் வைத்து வீதி உலா கொண்டு செல்ல வேண்டும் என எண்ணினர். அதன்படி, கடந்த சில மாதங்களாக சுமார் 25 அடி உயரத்தில் புதிய தேர் வடிவமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தேர் வடிவமைப்பு முடிந்த நிலையில் அதற்கான வெள்ளோட்ட பெருவிழா நேற்று நடைபெற்றது.

முன்னதாக காலை 8 மணிக்கு கோயில் வளாகத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கிராம தேவதையாக விளங்கும் எட்டியம்மனை வண்ண பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்து தேரில் வைத்து காலை 9 மணிக்கு பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் பெரணமல்லூர் பேரூராட்சி பகுதியில் மாடவீதி வழியாக தேரினை இழுத்துச் சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர். இதையொட்டி செய்யாறு இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி மின் விநியோகம் தடை செய்யப்பட்டிருந்தது.

The post எட்டியம்மன் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் பெரணமல்லூர் பேரூராட்சியில் appeared first on Dinakaran.

Related Stories: