பீகாரில் நடந்ததை போன்று உ.பி-யிலும் கைவரிசை; ‘இந்தியா’ கூட்டணியில் மேலும் ஒரு கட்சி விலகல்?: ராகுலின் யாத்திரைக்கு மத்தியில் திருப்பம்

புதுடெல்லி: பீகாரில் நடந்ததை போன்று உத்தரபிரதேசத்திலும் ‘இந்தியா’ கூட்டணியில் மேலும் ஒரு கட்சி விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ராகுலின் யாத்திரைக்கு மத்தியில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறியது. தற்போது பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ள நிதிஷ் குமாரின் செயலை பல தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் ‘இந்தியா’ கூட்டணியை பலவீனப்படுத்த பாஜக எடுக்கும் முயற்சிகள் குறித்தும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் மக்களவைத் தேர்தலில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு 4 இடங்களை ஒதுக்கீடு செய்வதாக பாஜக உத்தரவாதம் அளித்துள்ளதால், ‘இந்தியா’ கூட்டணியில் மேலும் ஒரு கட்சி விலக வாய்ப்புள்ளது. இதன்மூலம் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி பலவீனமடையும் என்கின்றனர். இதுகுறித்து ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரியை கேட்டபோது, இதுகுறித்து அவர் பதிலளிக்கவில்லை என்றாலும், பாஜகவுடனான கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்கு உத்தரபிரதேசத்தில் ஜாட் சமூகத்தினரின் வாக்குகள் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு கிடைக்க வாய்ப்புள்ளதால், அந்த கட்சியை வளைத்து போட பாஜக திட்டமிட்டுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய லோக் தளம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் சில இடங்களை பெறமுடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை அடுத்த வாரம் உத்தரபிரதேசத்தில் நுழையவுள்ள நிலையில், ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து ராஷ்டிரிய லோக் தளத்தை வெளியே இழுப்பதற்காக வியூகங்களை பாஜக செய்து வருவதாக கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் பிளவு?: லோக் ஜன சக்தி கட்சியின் (ராம்விலாஸ் பஸ்வான்) தலைவர் சிராக் பஸ்வான், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதிஷ் குமார் திரும்பியது சிராக் பஸ்வானுக்கு பிடிக்கவில்லை. காரணம் நிதிஷ் குமாருக்கும், சிராக் பஸ்வானுக்கும் பீகார் அரசியலில் அடிக்கடி மோதல்கள் ஏற்படும். வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது பிரச்னைகளை ஏற்படுத்தி, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற சிராக் பஸ்வான் தயாராகி வருகிறார்.

இதற்கு முக்கிய காரணம் பீகார் மாநிலத்திற்கு உட்பட்ட 11 மக்களவைத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை சிராக் பஸ்வான் நியமித்துள்ளதால், அவர் பாஜக கூட்டணியில் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி வெற்றி பெற்றது. அதன்பின் லோக் ஜனசக்தி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. ஐந்து எம்பிக்கள் சிராக் பஸ்வானின் நெருங்கிய உறவினரான பசுபதி பராஸின் பக்கம் சாய்ந்தனர். அதனால் சிராக் பஸ்வானின் செல்வாக்கு சரிந்து காணப்படுகிறது. பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளை மகா கூட்டணிக்குள் கொண்டு வர ராஷ்ட்ரிய ஜனதா தளம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post பீகாரில் நடந்ததை போன்று உ.பி-யிலும் கைவரிசை; ‘இந்தியா’ கூட்டணியில் மேலும் ஒரு கட்சி விலகல்?: ராகுலின் யாத்திரைக்கு மத்தியில் திருப்பம் appeared first on Dinakaran.

Related Stories: