முதனை ஊராட்சியை பிரிக்க கோரி கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்

விருத்தாசலம், பிப். 8: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள முதனை ஊராட்சியில் முதனை, விருத்தகிரிக்குப்பம், புது விருத்தகிரிக்குப்பம், எடக்குப்பம், ஞானியார் தெரு, வீரட்டிக்குப்பம் பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் அனைத்தும் முதனை பகுதிக்கு மட்டுமே செயல்படுத்தி வருவதாக விருத்தகிரிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் விருத்தகிரிகுப்பம் பகுதியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரவில்லை என கூறி தங்களது பகுதியை மட்டும் தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள பொது இடங்கள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், தேர்தலுக்குள் தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post முதனை ஊராட்சியை பிரிக்க கோரி கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: