பருவமழை பொய்த்தது தா.பழூர் பகுதி கிராமங்களில் வெறிச்சோடிய விளை நிலங்கள்

*பயிர் காப்பீட்டு தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை

தா.பழூர் : தா.பழூர் அருகேயுள்ள பொன்னாற்றில் போதிய நீர் வரத்து இல்லாமல் 2000 ஏக்கரில் சாகுபடி செய்ய முடியாமல் போனதால் அறுவடை பணிகள் இன்றி களையிழந்த நிலையில் கிராமங்கள் உள்ளன.அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய பகுதிகளான காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, அடிக்காமலை, கூத்தங்குடி, தாதம்பேட்டை, குறிச்சி, இடங்கண்ணி, கீழ குடிக்காடு, தென்கச்சி பெருமாள் நத்தம், சோழமாதேவி, தென்னவநல்லூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பொன்னாற்று நீரை நம்பியே சம்பா சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பாண்டு ஜனவரி 12ம் தேதிக்கு முன் மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் விவசாய நிலங்களுக்கு வந்து சேரவில்லை அதனால் தண்ணீர் வந்துவிடும் என்ற நிலையில் விவசாயிகள் கைத்தெளிப்பு முறையில் நெல் விதைப்பு செய்திருந்தனர். ஆனால் தண்ணீர் வரவில்லை. இந்நிலையில் அவ்வப்போது பெய்த லேசான மழை காரணமாக நெல்மணிகள் முளைத்தாலும் பின்னர் போதிய மழையின்மையால் கருகின. இதனால் சுமார் 2000 ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்ய இயலாமல் போனது.

கிராமத்திற்கு இரண்டு அல்லது மூன்று மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சும் நிலையில் உள்ள அதிக நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் மட்டும் சாகுபடி செய்துள்ளனர். மற்ற சிறு, குறு விவசாயிகள் தண்ணீர் இன்றி சாகுபடி செய்யவில்லை. இதனால் தற்போது குறைந்த அளவிலான நிலங்களில் மட்டுமே அறுவடை பணிகள் நடந்து வருகிறது. பொதுவாக இப்பகுதிகளில் தற்போது அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரமாக இருப்பார்கள்.

பல்வேறு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதனால் இந்த பகுதி கிராமங்கள் பரபரப்பாக காணப்படும். ஆனால் தற்ேபாது சாகுபடி செய்யாத விளைநிலங்களில் கருவேல மரங்கள் மண்டியுள்ளன. கூலித் தொழிலாளர்களும் வேலையின்றி சோர்ந்து போயிருக்கின்றனர். இதனால் பரப்பாக காணப்படும் இப்பகுதி கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: அரசு அதிகாரிகள் நேரடியாக இப்பகுதியில் ஆய்வு செய்து அரசுக்கு உரிய தகவலை அளிக்க வேண்டும். மேலும் விவசாயிகள் கூட்டுறவு சங்க மூலம் வாங்கிய விவசாய கடன் மற்றும் நகை அடகு கடன்களை எவ்வாறு அடைக்க முடியும் என்று தவித்து வருகின்றனர். எனவே விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும்.

மழையின்றி விவசாயம் பொய்த்ததால் உணவுக்கு அரிசி, கால்நடைகளுக்கு வைக்கோல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர் இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும்.இது அடுத்த ஆண்டு விதை நெல் வாங்கவும், உழவு செய்வதற்கும் உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

The post பருவமழை பொய்த்தது தா.பழூர் பகுதி கிராமங்களில் வெறிச்சோடிய விளை நிலங்கள் appeared first on Dinakaran.

Related Stories: