சூலூரில் பழைய இரும்பு வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் பணம் பறித்த 5 பேர் கைது

சூலூர் : சூலூரில் பழைய இரும்பு வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சத்தை பறித்து சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் மசக்காளிபாளையம் ஜிவி ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் முகுந்தன் (41). இவர், இரும்பு வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். அந்த வகையில், கடந்த வாரம் இவரை அணுகிய சேலத்தை சேர்ந்த ஜெயசீலன் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு வரவு, செலவு வைத்திருந்தார். கடந்த வாரம் முகுந்தனை அணுகிய ஜெயசீலன் தனது நண்பர் இரும்பு வியாபாரம் செய்து வருவதாகவும், அவரது குடோனில் பழைய இரும்புகள் அதிக அளவில் இருப்பதாகவும் அவற்றை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய முகுந்தன் ரூ.10 லட்சம் பணத்தை பிளாஸ்டிக் கவரில் எடுத்துக்கொண்டு ஜெயசீலனை அணுகியுள்ளார். அப்போது தனக்கு முக்கியமான வேலை இருப்பதாகவும், தனக்கு நெருக்கமான நண்பர் கணேசன் என்பவர் உள்ளார். அவருடன் சென்றால் பழைய இரும்பு குடோனை காட்டுவார். அங்கு பணத்தை செலுத்தி பழைய இரும்பை எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். இதுதவிர, வரும் லாபத்தில் பங்கு பிரித்துக் கொள்ளலாம் என கூறி கணேசனுடன் முகுந்தனை இருசக்கர வாகனத்தில் ஜெயசீலன் அனுப்பி வைத்துள்ளார்.

கணேசன் இருசக்கர வாகனத்தை ஓட்ட முகுந்தன் பணப்பையுடன் பின்னால் அமர்ந்து இருந்தார். இருவரும் சூலூர் பிரிவு அருகே வந்தபோது திடீரென அருகில் இருந்த கடையில் பெரிய அட்டை பெட்டி ஒன்றை வாங்கி அதை பின்னால் அமர்ந்திருந்த முகுந்தனிடம் கணேசன் கொடுத்துள்ளார். அட்டை பெட்டியை பிடிக்க முகுந்தன் சிரமப்பட்டார். அப்போது முகுந்தனிடம் கணேசன், ‘‘பணப்பையை கொடுங்கள். டேங்க் கவரில் வைத்துக்கொள்கிறேன்’’ என கூறி வாங்கி தனது இருசக்கர வாகனத்தின் டேங்க் கவரில் வைத்துக் கொண்டார்.

பின்னர் அட்டை பெட்டியுடன் முகுந்தன் இரு சக்கர வாகனத்தில் ஏற சிரமப்பட்டதை பயன்படுத்தி முகுந்தனை ஏற்றாமலேயே விட்டுவிட்டு கணேசன் பைக்கில் தப்பி சென்றார். இதைத்தொடர்ந்து ஜெயசீலன் மற்றும் கணேசனை போன் மூலம் தொடர்பு கொள்ள முகுந்தன் முயன்றபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அட்டை பெட்டியை பிரித்து பார்த்தபோது அதில் பழைய பேப்பர்கள் அடுக்கப்பட்டு பேக் செய்யப்பட்டிருந்தது. அதனை தூக்கிக்கொண்டு ஏற முடியாமல் போகும்போது பணத்துடன் தப்பிக்க திட்டமிட்டிருப்பதை முகுந்தன் உணர்ந்தார்.

இதையடுத்து நடந்த சம்பவம் தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயசீலன், கணேசனை தேடி வந்தனர். மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் கருமத்தம்பட்டி டிஎஸ்பி தங்கராமன், சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், எஸ்ஐ ராஜேந்திரபிரசாத் தலைமையிலான தனிப்படையினர் நேற்று காலை சூலூர் தென்னம்பாளையம் பிரிவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.அப்போது அந்த நபர் முகுந்தனிடம் பழைய இரும்பு வாங்கி கொடுப்பதாக கூறி ஏமாற்றி பணம் பறித்த வலியாம்பாளையத்தை சேர்ந்த கணேசன் (37) என்பது தெரியவந்தது.
கணேசன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘‘நானும், ஜெயசீலனும் நண்பர்கள்.

ஜெயசீலனுக்கு முகுந்தனிடம் பணம் இருப்பது தெரியும். அவரை ஏமாற்றி அவரிடமிருந்து பணத்தை பறிக்க திட்டமிட்டோம். இதற்காக கோவை சவுரிபாளையத்தைச் சேர்ந்த முருகேசன் (30), சுஜித் (29), ஜெயராஜ் (28) ஆகியோரை சேர்த்துக்கொண்டோம். அதன்படி அட்டை பெட்டியில் பழைய பேப்பரை போட்டு முகுந்தனிடம் கொடுப்பதுபோல ஏமாற்றி பணத்தை பறித்துச் சென்றோம்’’ என்று கூறினார்.

இதையடுத்து கணேசனை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் ஜெயசீலன், சுஜித், ஜெயராஜ், முருகேசன் ஆகியோரை கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.5 லட்சத்தையும் கைப்பற்றினர். கைதான கணேசன், ஜெயசீலன் மீது ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

The post சூலூரில் பழைய இரும்பு வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் பணம் பறித்த 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: