வெள்ளத்தில் தத்தளிக்கும் லிபியா: நிலம் தெரியாதவாறு எங்கும் சூழ்ந்த நீர்; நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் வீடுகளை காலி செய்யும் மக்கள்..!!

ஸ்லிட்டன்: பருவநிலை மாற்றத்தால் ஆங்காங்கே நிலத்தடி நீர் வறண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் சூழலில், லிபியாவில் குறிப்பிட்ட பகுதி மக்கள் நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் வீடுகளை காலி செய்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். லிபியாவின் தலைநகரமான டிரிபோலியில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் கிழக்கில் உள்ளது ஸ்லிட்டன் என்ற நகரம். வங்கி நிறுவனங்கள், கடை வீதிகள், ஹோட்டல்கள் என நவீன கட்டமைப்புகளுடன் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக இருந்த இந்த கடற்கரை நகரம் அண்மை காலமாக திரும்பும் திசை எல்லாம் தண்ணீர் சூழ்ந்து காட்சியளிக்கிறது.

விளைநிலங்கள், வீடுகள், சாலைகள் என நிலத்தையும், நீர் நிலத்தையும் வித்தியாசப்படுத்த முடியாதபடி எங்கும் கழிவுநீரோடு நன்னீரும் சேர்ந்துள்ளது. இதற்கு கடந்த 10 ஆண்டுகளாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதே காரணம் என்கின்றனர் உள்ளூர் மக்கள். ஸ்லிட்டன் நகரின் இந்த நிலைக்கு கழிவுநீர் கட்டமைப்பு, மழை வெள்ளம், பூமிக்கு அடியில் உள்ள அணைகள் மற்றும் பழமையான குடிநீர் விநியோக குழாய்களில் ஏற்பட்டுள்ள விரிசலே காரணம் என்கின்றனர் புவியியல் ஆர்வலர்கள். தற்போது கழிவுநீரோடு நிலத்தடி நீர் கலந்து இருப்பதும் குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஸ்லிட்டனின் பல்வேறு இடங்களில் வீடுகள், கட்டடங்களை தண்ணீர் சூழ்ந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் உயிருக்கு அஞ்சி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் லிபியா அரசும், தற்காலிகமாக நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் நீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றி வருகிறது. இதேநிலை நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் 160 மில்லியன் கனஅடியை எட்டும் என கூறப்படுகிறது.

The post வெள்ளத்தில் தத்தளிக்கும் லிபியா: நிலம் தெரியாதவாறு எங்கும் சூழ்ந்த நீர்; நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் வீடுகளை காலி செய்யும் மக்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: