திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தூத்துக்குடியில் பொதுமக்களுடன் சந்திப்பு: கோரிக்கை மனுக்களை பெற்றனர்

தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, நேற்று தூத்துக்குடியில் கருத்து கேட்பு பணியை தொடங்கி பல்வேறு தரப்பினரிடம் இருந்து மனுக்களை பெற்றது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில் திமுக தலைமைக் கழக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்துப் பாதுகாப்பு குழு செயலாளர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன் எம்எல்ஏ, கே.ஆர்.என் ராஜேஸ்குமார் எம்பி, மாணவரணி செயலாளர் சிவிஎம் எழிலரசன் எம்எல்ஏ, அயலக அணி செயலாளர் எம்எம்.அப்துல்லா எம்பி, மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

இந்த குழுவினரை தொழிற்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியார்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை பெற முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, இந்த குழுவினர் மாநில முழுவதும் சென்று பல்வேறு தரப்பினர் சந்தித்து கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளனர். இந்த குழு முதன்முதலாக நேற்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடிக்கு சென்றது. தூத்துக்குடியில் உள்ள மாலில் நடந்த கூட்டத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் இருந்து தேர்தல் குழு மனுக்களை பெற்றது. இதில் குழுவில் இடம் பெற்றிருந்த அமைச்சர் டிஆர்பி ராஜா, சென்னை மேயர் பிரியா கலந்துகொள்ளவில்லை.

* நெல்லை, தென்காசி, குமரி மக்களுடன் இன்று சந்திப்பு
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இன்று (செவ்வாய்) கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகின்றனர். இதில் குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் கருத்துகளை கேட்கின்றனர். 7ம் தேதி மதுரையிலும், 8ம் தேதி தஞ்சாவூரிலும், 9ம் தேதி சேலத்திலும், 10ம் தேதி கோவையிலும் 11ம் தேதி திருப்பூரிலும் திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. வரும் 21, 22, 23ம் தேதிகளில் 3 நாட்கள் சென்னையில் முகாமிட்டு மக்களிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்துகளை கேட்கின்றனர்.

* ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் என்ற நம்பிக்கையோடு மனு அளிக்கின்றனர்; கனிமொழி எம்.பி
தூத்துக்குடியில் கனிமொழி எம்பி அளித்த பேட்டி: தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தொழில் முனைவோர், வர்த்தக சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு தொழில், போக்குவரத்து வசதிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் தென்னை விவசாயம், மிளகாய் வத்தல், விருதுநகர் மாவட்டத்தினர் பட்டாசு தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களாக அளித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 10 இடங்களில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொழில் முனைவோர்களை சந்தித்து அவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டு முதல்வரிடம் சமர்பிக்கப்படும். அதன் பின்னர், தேர்தல் அறிக்கை இறுதி செய்யப்படும். நான் மீண்டும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார்.

தேர்தல் அறிக்கை குழுவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒன்றியத்தில் மக்களை மதிக்கின்ற, மாநில உரிமைகளை மதிக்கின்ற ஆட்சி வர வேண்டும் என்று விரும்புகின்றனர். சென்னை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு கூட ஒன்றிய அரசு நிதி வழங்காமல், தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தூத்துக்குடியில் பொதுமக்களுடன் சந்திப்பு: கோரிக்கை மனுக்களை பெற்றனர் appeared first on Dinakaran.

Related Stories: