ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி: ஆதரவு 47; எதிர்ப்பு 29; பா.ஜ முயற்சி தோல்வி

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் பங்கேற்ற கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்தார். அவர் மீதான நிலமோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை ஜன.31ம் தேதி கைது செய்தது. இதையடுத்து ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த சம்பாய் சோரன் பிப்.2ம் தேதி பதவி ஏற்றார்.

அவரது அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவும் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து எம்எல்ஏக்களை பா.ஜ விலைக்கு வாங்குவதை தடுக்க கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ஐதராபாத் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு என்பதால் அவர்கள் அனைவரும் ராஞ்சி அழைத்து வரப்பட்டனர். இதே போல் அமலாக்கத்துறை காவலில் இருந்த முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டார். நேற்று பிற்பகல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

மொத்தம் உள்ள 81 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்கு 41 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. தற்போது 2 காலியிடம் உள்ளது. ஆனால் அவைக்கு 77 பேர் தான் வந்திருந்தனர். பாஜ எம்எல்ஏ ஒருவரும், ஜே.எம்.எம் கட்சி எம்எல்ஏ ஒருவரும் உடல் நலக்குறைவு காரணமாக அவைக்கு வரவில்லை. சுயேச்சை எம்எல்ஏ சரயு ராய் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரனுக்கு ஆதரவாக 47 பேர் வாக்களித்தனர். எதிர்த்து பா.ஜ தலைமையிலான எதிர்க்கட்சிகள் அணியை சேர்ந்த 29 பேர் வாக்களித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில சம்பாய் சோரன் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதனால் ஜார்க்கண்ட் கூட்டணி அரசை வீழ்த்தும் பா.ஜ முயற்சி தோல்வி அடைந்தது.

* ஜனநாயகத்திற்கு ஆபத்து: முதல்வர் சம்பாய் சோரன்
முதல்வர் சம்பாய் சோரன் பேசும்போது,’ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்க்கண்ட் அரசை சீர்குலைக்க பாஜ முயன்றது. அவர்கள் ஒன்றிய அமைப்புகளைப் பயன்படுத்தி ஹேமந்த் சோரனை பொய் வழக்குகளில் சிக்க வைத்தனர். ஹேமந்த் இருக்கும் இடத்தில், வலிமை இருக்கிறது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல். அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர் வழியைப் பின்பற்றி ஜனநாயகத்தைக் காப்பாற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

* சர்வாதிகாரியின் ஆணவத்தை ஜார்க்கண்ட் தகர்த்தது: காங்கிரஸ்
நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றதும், சர்வாதிகாரியின் ஆணவத்தை ஜார்க்கண்ட் தகர்த்தெறிந்துவிட்டதாக காங்கிரஸ் தெரிவித்தது. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில்,’சர்வாதிகாரியின் ஆணவத்தை ஜார்க்கண்ட் தகர்த்தெறிந்தது. இந்தியா வென்றது, மக்கள் வென்றனர். இந்தியா கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தமிழ்நாடு, கேரளா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் ஒருதலைப்பட்சமாகவும், உள்துறை அமைச்சகம் சொல்வதை கேட்டும் செயல்படுகிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

* ஊழல் செய்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்
சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தில் பங்கேற்று, ஜே.எம்.எம் செயல் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் பேசியதாவது: என் மீதான நில மோசடி குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு பாஜவுக்கு சவால் விடுகிறேன். என் பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டதை நிரூபித்தால்,அரசியலில் இருந்தே விலகுவேன். ஜனவரி 31 இந்திய வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயம். கவர்னர் மாளிகை உத்தரவின் பேரில் ஒரு முதல்வர் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்டில் ஒரு பழங்குடி முதல்வர் 5 ஆண்டுகளை நிறைவு செய்வதை பாஜ விரும்பவில்லை. அவர்கள் தங்கள் ஆட்சியில் கூட இதை அனுமதிக்கவில்லை. இருப்பினும், நான் இப்போது கண்ணீர் விடமாட்டேன். நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பேன்.

பழங்குடியினரை தீண்டத்தகாதவர்கள் என்று பாஜ கருதுகிறது. நாட்டில் பா.ஜ ஆட்சியில் பழங்குடியினர் மற்றும் தலித்துகள் பாதுகாப்பாக இல்லை. நான் இன்னும் அதிக பலத்துடன் மீண்டும் வருவேன். பா.ஜ சதி முறியடிக்கப்படும். ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றபோது, ​​ராமராஜ்ஜியத்தைக் கொண்டுவருவோம் என்று பாஜ கூறியது. முதலில் பீகாரில் அரசை சீர்குலைத்தனர். அதன்பின் ஜார்கண்டில் அந்த முயற்சி நடந்தது. ஆனால் பா.ஜ முயற்சி பலிக்கவில்லை’ என்றார். சட்டப்பேரவைக்கு ஹேமந்த் சோரன் வரும்போது ஆளும் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி எம்எல்ஏக்கள், ‘ஹேமந்த் சோரன் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பி வரவேற்றனர்.

The post ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி: ஆதரவு 47; எதிர்ப்பு 29; பா.ஜ முயற்சி தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: