ஆறுகளில் மணல் அள்ள அனுமதி: கேரள பட்ஜெட்டில் தகவல்

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவையில் நிதியமைச்சர் கே.என். பாலகோபால் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முக்கிய விவரங்கள் வருமாறு: கேரளாவில் பொதுக் கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக ரூ.1032.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளி மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தப்படும். சபரிமலை விமான நிலையத்திற்கு ரூ.1.82 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். துறைமுகங்களின் வளர்ச்சிக்காகவும், கப்பல் போக்குவரத்துக்காகவும் ரூ.74.7 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வரும் மே மாதம் முதல் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் செயல்படத் தொடங்கும். இந்த துறைமுகம் சிறப்பு முனையமாக மாற்றப்படும். இந்தத் துறைமுகத்தின் மூலம் தென்னிந்திய வர்த்தகத்தில் பல்வேறு வியத்தகு மாற்றங்கள் ஏற்படும். வருங்கால கேரள மாநில வளர்ச்சியின் நுழைவாயிலாக விழிஞ்ஞம் துறைமுகம் மாறும். கடந்த பல வருடங்களாக ஆற்று மணலை அள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு ரூ.200 கோடி வருமானம் கிடைக்கும். தொழில், கல்வி, சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறைகளில் தனியார் முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்துறையில் அடுத்த மூன்று வருடங்களில் ரூ.3 லட்சம் கோடி முதலீடு கொண்டுவர முயற்சி செய்யப்படும்.ரப்பருக்கான ஆதார விலை ரூ.170லிருந்து ரூ.180ஆக உயர்த்தப்படும். அகில இந்திய டூரிஸ்ட் பஸ்களுக்கான வரி குறைக்கப்படும். நீதிமன்ற கட்டணம் உயர்த்தப்படும். பத்திரிகையாளர்களுக்கான சுகாதார இன்சூரன்ஸ் ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தப்படும். சபரிமலை மாஸ்டர் பிளானுக்கு ரூ.27.6 கோடி ஒதுக்கப்படும்.வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளின் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post ஆறுகளில் மணல் அள்ள அனுமதி: கேரள பட்ஜெட்டில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: