ஏன் எதற்கு எப்படி?: மூலவர் இருக்கும் கருவறைக்கு மேல் விமானம் ஏன் அமைக்கப்படுகிறது?

திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா

?மூலவர் இருக்கும் கருவறைக்கு மேல் விமானம் ஏன் அமைக்கப்படுகிறது?
– ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

மானம் என்றால் அளவு என்று பொருள். `வி’ என்றால் கடந்த என்று பொருள். அதாவது அளவு கடந்த தெய்வீகத்தன்மை உடையதுதான் விமானம் என்பது. ஒரு ஆலயம் என்பது மனித உடலோடு ஒப்பிடப்படுகிறது. அதில் கருவறை என்பது தலைப்பகுதியாகவும் அதன்மேல் உள்ள விமானம் என்பது கிரீடமாகவும் பார்க்கப்படுகிறது. விமானத்தை கட்டமைப்பதிலும் ஆகம விதிமுறைகள் என்பது உண்டு.

விமானத்தின் உச்சியில் அமைந்துள்ள கலசம் தெய்வீக சக்தியை ஈர்க்கும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும். கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மூலவர் விக்கிரகம் விமான கலசத்தின் மூலமாக தெய்வீக சக்தியினை ஈர்த்துக்கொண்டு சாந்நித்யம் பெறுகிறது. ஒரு அரசனுக்கு தலையில் கிரீடம் என்பது எத்தனை முக்கியமோ அதுபோல, கருவறையில் உள்ள மூலவருக்கு விமானம் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாலேயே கருவறையின் மேல் விமானம் என்பதும் கட்டமைக்கப்படுகிறது.

?கல்யாண வீடுகள், கோயில் விசேஷங்கள் முதலான இடங்களில், வாழைமரங்களை நிறுத்தி, கட்டி வைப்பது ஏன்?
– பாபு, திருவண்ணாமலை.

மரம், செடிகள் எல்லாம் கரியமில வாயுவை வாங்கிக்கொண்டு, பிராணவாயுவைக் கொடுக்கும். பலர் கூடும் இடங்களில் வெளிப்படும் கரியமில வாயுவால் சுற்றுப்புறச் சூழ்நிலை கெட்டு, ஆரோக்கியம் கெடும். அதை நீக்கவே நாம் வெளியிடும் கரியமில வாயுவை ஏற்றுக்கொண்டு, நமக்குத் தேவையான பிராண வாயுவை அதிக அளவில் வெளியிடும் வாழை மரங்களை நிறுத்திக் கட்டி வைத்தார்கள். வாழை என்பதற்கு மற்றொரு சிறப்பும் உண்டு.

வாழை இலை, வாழைச் சருகு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழைப்பட்டை, வாழை(அடிக்)கிழங்கு என அனைத்தும் உபயோகப்படுவது வாழையில் மட்டுமே! புதுமணத் தம்பதிகள் அவ்வாறு வாழ வேண்டும் என ஆசி கூறும் விதமாகவே வாழை மரங்களை தார்பூ ஆகியவற்றுடன் நிறுத்திக்கட்டி வைத்தார்கள்.

மற்றொரு காரணம்; பலர் கூடும் இடங்களில் எதிர்பாரா விதமாகப் பாம்பு முதலானவைகளால் தீங்கு விளையலாம். அப்படிப்பட்ட நேரத்தில், வாழைப்பட்டையைப் பிழிந்து அதன் சாற்றைக் குடிக்கச் செய்தால், விஷ உபாதை நீங்கும். ஒரு வேளை அதற்குள் பற்கள் கிட்டிப் போய்விட்டால், பாதிக்கப்பட்டவரை வாழைப் பட்டைகளில் கிடத்தினால், கிட்டிப்போன பற்கள் தாமாகவே
விலகும்.

வாழைப்பட்டைச் சாற்றைக் குடிக்கச் செய்யலாம். வாழையின் மருத்துவ குணங்களுக்காகவும் அவை, பொதுமக்கள் கூடும் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

? வாழை இலை போட்டுச் சாப்பிடும்போது, இலையின் நுனி இடது கைப்பக்கமாக இருக்க வேண்டும் என்கிறார்களே, அது ஏன்?
– பிரியாதேவி, மதுரை.

சேக்கிழார் இதையே வேறு விதமாகச் சொல்கிறார். நுனி இடது கைப்பக்கமாக என்று சொல்லவில்லை அவர்; ‘ஈர் வாய் வலம் பெற வைத்து’ என்கிறார். இடது என்பது அமங்கலம். வலது என்பது மங்கலம். வலம் வருதல் என்று சொல்கிறோம் அல்லவா? அதன் காரணமாகவே, நுனி இடப்பக்கமாக என்று சொல்லாமல், இலையின் நறுக்கிய பகுதியை வலப்பக்கமாக வைத்து என்று பெரிய புராணத்தில் சொல்கிறார் சேக்கிழார்.

அமங்கலச் சொல் இல்லாத அற்புதமான நூல் பெரிய புராணம். நுனி வாழை இலையில் நுனிப்பகுதி மிகவும் சிறிதாகச்சுருங்கி இருக்கும். நறுக்கப்பட்ட பகுதி அகன்று விரிந்து இருக்கும். சுருங்கிய நுனிப்பகுதி, சரியாகத் தூய்மை செய்யப்படாமல் இருக்கும். அடுத்தது என்னதான் அப்பகுதியை சுருக்கம் நீக்கி வைத்தாலும், அப்பகுதியில் எதையாவது வைத்தால் அது சுருங்கும்.

உண்பதற்கு இடைஞ்சலாக இருக்கும். அதன் காரணமாகவே உணவின்போது மிகவும் குறைந்த அளவு உபயோகிக்கும் பொருட்களை அதிகம் ஈரம் இல்லாத பொருட்களை நுனிப் பக்கம் வைத்து, பச்சடி, கூட்டு, பாயசம் முதலான அதிகம் உபயோகிக்கும் ஈரப்பொருட்களை, இலையின் அகன்ற பக்கம் வைத்தார்கள்.

?குபேர மூலை என்றால் என்ன? வீட்டில் அது எங்கே இருக்க வேண்டும்?
– கோபால்தாஸ், விழுப்புரம்.

வீட்டின் வடக்கு பாகத்தை குபேர மூலை என்று அழைப்பார்கள். எட்டு திசைகளில் வடக்கு திசைக்கு அதிபதி குபேரன் என்பதால் அவரது பெயரில் அந்த திசையானது குபேர மூலை என்று அழைக்கப்படுகிறது. வீட்டின் வடக்கு திசையில் ஒரு அறை அமைந்திருந்தால் அந்த அறைக்குள் பணம் மற்றும் நகைகளை சேமித்து வைக்கும் அலமாரியை வைத்துக்கொள்வது நல்லது.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஏன் எதற்கு எப்படி…?
தினகரன், ராசி பலன்கள்
தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை – 600 004.

The post ஏன் எதற்கு எப்படி?: மூலவர் இருக்கும் கருவறைக்கு மேல் விமானம் ஏன் அமைக்கப்படுகிறது? appeared first on Dinakaran.

Related Stories: