காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள்

 

காஞ்சிபுரம், பிப்.5: காஞ்சிபுரம் சாலைகளில் மாடுகள் கூட்டமாக சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால், விபத்து அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகராக மட்டுமின்றி கோயில்களின் நகரம் என்றும் பட்டு நகரம் என்றும் சிறப்பு பெற்று விளங்குவதால் காஞ்சிபுரத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் என பல்வேறு தரப்பட்டவர்கள் இங்கு வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் பிரதான சாலைகள் மற்றும் கோயில்கள் உள்ள பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள், பக்தர்களுக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித் திரிவதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும், சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் எனப் பலருக்கும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் இடையூறாகவும், ஆபத்தாகவும் இருந்து வருகிறது.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் வந்தவாசி சாலை, ஜெம், நகர், திருக்காலிமேடு, ரெட்டி பேட்டை தெரு, ராஜாஜி மார்க்கெட் பகுதி, ஜவகர்லால் மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாடுகள் சாதாரணமாக சுற்றி திரிகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 32வது வார்டு அஷ்டபுஜ பெருமாள் கோவில் பின் தெருவில் நேற்று முன்தினம் 4 வயது சிறுமி தனனியா வீட்டின் வெளியே சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த பசு மாடு ஒன்று வேகமாக சிறுமியை முட்டி தள்ளி உள்ளது.

குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு தாய் ஓடிவந்து மாட்டிடம் இருந்த குழந்தையை மீட்டார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து பொது மக்கள் குடியிருப்பு பகுதிகளும் சாலையிலும் மாடு உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்று விபத்துகள் ஏற்படுத்தியும் சாலையில் நடந்து செல்பவர்களை இடித்து காயம் ஏற்பட்டு உயிர் பலி உண்டாகும் நிலை தொடர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளில் மாடுகள் வளர்க்க அனுமதி இல்லை.

ஆனால் வாழ்வாதாரம் என்று கூறி சிலர் மாடு வளர்க்கின்றனர். அவ்வாறு நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க வேண்டும் என்றால் 36 சதுர அடி கார்பெட் ஏரியா இருக்க வேண்டும். அதற்குள் தான் அவர்கள் மாட்டை கட்டி வளர்க்க வேண்டும். மாடுகளை சாலைகளில் திரிய விடக் கூடாது போன்ற விதிகள் உள்ளன. ஆனால் விதிகளை மீறி மாடு வளர்ப்பவர்கள் முறையாக பராமரிக்காமல் சாலைகளில் திரிய விடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, கால்நடைகள் வளர்ப்போர், கால்நடைகளை சாலைகளில் திரிய விடாமல், முறையாக கட்டி பராமரிக்க வேண்டும். இதற்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள் appeared first on Dinakaran.

Related Stories: