நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உயர் கல்வித்துறை அமைச்சர்: 459 பேருக்கு ஆளுநர் பட்டங்களை வழங்கினார்

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. இதில், தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு 459 பேருக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்கினார். இதில், 351 பேர் பிஎச்டி பட்டப்படிப்பு சான்றிதழ்களையும், 108 பேர் தங்கப்பதக்கத்துடன் பட்டப்படிப்பு சான்றிதழ்களையும் பெற்றனர். இந்தாண்டு பல்கலைக்கழகத்தில் மொத்தம் 40,622 பேர் பட்டம் பெற்றனர். இவர்களில் 396 பேர் பிஎச்டி பட்டமும், 104 பேர் எம்பில் பட்டமும், 6,473 பேர் முதுநிலை பட்டமும், 22,737 பேர் இளநிலை பட்டமும் பெற்றனர். பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி கல்லூரிகளில் இருந்து 9,036 பேரும், தொலைதூரக் கல்வி மூலம் 1,876 பேரும் பட்டம் பெற்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வுபெற்ற பாளை கேடிசி நகரைச் சேர்ந்தவர் முருகன்(74) என்பவர் பல்கலையில் தமிழ் இலக்கியத்தில் பிஎச்டி டாக்டர் பட்டம் பெற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவில் சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதனைதொடர்ந்து ஆளுநர் பதக்கம் பெற்ற மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினார். விழாவில் ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நளினாக் வியாஸ், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னதாக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், உயர் கல்வித்துறை முதன்மை செயலர் கார்த்திக் ஆகியோருக்கு பல்கலைக்கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

The post நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உயர் கல்வித்துறை அமைச்சர்: 459 பேருக்கு ஆளுநர் பட்டங்களை வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: