ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கம்யூனிஸ்ட் கருப்பு கொடி: மாற்று வழியில் சென்றார்

கும்பகோணம்: தமிழக ஆளுநருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் மாற்று வழியில் சென்றார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், கலந்துகொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் நேற்று காலை 7.30 மணிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக திருபுவனம் வந்தார். இந்நிலையில், தொடர்ந்து மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதோடு, வெண்மணி தியாகங்களை கொச்சைப்படுத்தி பேசி சர்ச்சையை ஏற்படுத்தும் ஆளுநருக்கு கும்பகோணம் செட்டிமண்டபம் புறவழிச்சாலை பகுதியில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி காட்ட திட்டமிட்டு திரண்டிருந்தனர்.

இதனால் ஏற்கனவே திட்டமிட்ட கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலை வழியாக ஆளுநர் வராமல் மாற்று வழியாக வேப்பத்தூர் சாலை வழியாக திருபுவனம் வந்தார். இதற்கிடையில் திட்டமிட்டப்படி ஆளுநருக்கு எதிராக கும்பகோணம் செட்டிமண்டபம் புறவழிச்சாலை பகுதியில் மா.கம்யூ., தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கம்யூனிஸ்ட் கருப்பு கொடி: மாற்று வழியில் சென்றார் appeared first on Dinakaran.

Related Stories: