அதிமுக உட்கட்சி பூசல் டீக்கடையில் பஞ்சாயத்து நடத்திய நத்தம் விஸ்வநாதன்

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை முடித்துவிட்டு முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் மேடையை விட்டு இறங்கினார். அப்போது, கட்சியின் பொறுப்பாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஒருவர் மீது ஒருவரை மாறி மாறி சரமாரியாக புகார் அளித்தனர். பின்னர் நத்தம் விஸ்வநாதன், இதுகுறித்து விசாரித்து சமாதானம் செய்து வைப்பதற்காக நிலக்கோட்டை – மதுரை சாலையில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றார்.

நிலக்கோட்டை பேரூர் முன்னாள் பொறுப்பாளர் தங்கராஜ், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் கணேசன் அடங்கிய குழுவினர், ‘‘நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழியின் கணவர் சேகர், ஒன்றிய செயலாளர் யாகப்பன் ஆகியோர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் எவ்வித ஆலோசனைகளும் செய்யாமல் தன்னிச்சையாக செயல்படுகின்றனர், யாரையும் மதிப்பதில்லை. எங்களை செயல்படவிடாமல் தடுத்து கட்சியை முடக்குகின்றனர்’’ என சரமாரியாக குற்றச்சாட்டுகள் வைத்தனர். தொடர்ந்து இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்படவே சமாதானம் செய்ய முடியாமல் திணறிய நத்தம் விஸ்வநாதன் நைசாக நழுவி காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். எனினும் டீக்கடைக்குள் துவங்கிய கட்சியின் உட்கட்சி பூசல், வாக்குவாதம் சாலை வரைக்கும் நீடித்தது. இச்சம்பவம் அதிமுகவினர், அப்பகுதியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

The post அதிமுக உட்கட்சி பூசல் டீக்கடையில் பஞ்சாயத்து நடத்திய நத்தம் விஸ்வநாதன் appeared first on Dinakaran.

Related Stories: