வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில்; தெப்பக்குளம் ரூ.3 கோடியில் மறுசீரமைப்பு: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்

பூந்தமல்லி: வளசரவாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோயில் தெப்பக்குளத்தை ரூ.2.99 கோடியில் மறுசீரமைப்பு செய்யும் பணியை அடிக்கல் நாட்டி அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோயில் தெப்பக்குளம் ரூ.2.99 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகளுக்கான தொடக்க விழா கோயில் வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், இணை ஆணையர் ரேணுகாதேவி, மண்டலக்குழு தலைவர் நொளம்பூர் ராஜன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் மதியழகன், மாமன்ற உறுப்பினர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து சீரமைக்கப்பட உள்ள குளத்தின் அருகே பூமி பூஜை நடைபெற்றது. இதில் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் திருப்பணி கல்வெட்டினை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 776 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் திருக்குளம் அமைக்கின்ற பணி ஐந்தாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்தது. இந்த பணிக்கு இன்று 2 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் திருக்குளம் சீரமைப்பு பணியை துவக்கி வைக்கின்ற பணி தொடங்கியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு 1339 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. இன்று மட்டும் 13 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கோயிலுக்கு ரூ.1.50 கோடி செலவில் திருப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.5572 கோடி. பல்வேறு கோயில்களில் நான்கு புதிய குளங்கள் 4 கோடியே 41 லட்ச ரூபாய் செலவில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 122 குளங்களை ரூ.78 கோடியே 44 லட்சத்தில் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. 18,788 திருப்பணிகள் ரூ.4157 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை இந்து சமய அறநிலையத்துறையில் புரட்சி என்று சொல்லலாம்.

நடக்கின்ற திருப்பணிகளில் மூன்றில் ஒரு பங்கு பணிகளை உபயதாரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்றால் தற்போது நடக்கின்ற ஆட்சி மீது கொண்ட நன்மதிப்பை காட்டுகிறது. அவர்கள் அளிக்கின்ற நிதி முறையாக செல விடப்படுகிறது என்பதால் நிதி அளிக்கின்றனர். தமிழகத்திற்கு நிதி தேவை அதிகமாக உள்ளது. கொரோனா மற்றும் புயல் சீற்றத்தால் தமிழகத்திற்கு அதிகமான நிதி கோரி இருந்தோம். மிக்ஜாம் புயலுக்கும் எந்தவிதமான நிதியும் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கவில்லை. தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டிலாவது தமிழகத்திற்கு தேவையான நிதியும், அதிக திட்டத்தையும் ஒதுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில்; தெப்பக்குளம் ரூ.3 கோடியில் மறுசீரமைப்பு: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Related Stories: