காஞ்சிபுரம் அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் மாபெரும் புத்தகத்திருவிழா: பிப். 9 முதல் 19ம் தேதி வரை நடக்கிறது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், ”காஞ்சிபுரம் புத்தகத்திருவிழா-2024” என்ற தலைப்பில் 9.2.2024 முதல் 19.2.2024 வரை 11 நாட்கள் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இது 2வது மாபெரும் புத்தகத்திருவிழாவாகும்.

விழாவில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினரால் 100 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. குழந்தைகளுக்கான அரங்குகள் மற்றும் மாணவர்களுக்கான புத்தக அரங்குகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் வாசிக்கும் திறனை மேம்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவர்களுக்கு தினந்தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிந்தனையை தூண்டும் பேச்சாளர்கள், திறனை மேம்படுத்த வழிகாட்டும் பேச்சாளர்கள், சிந்திக்க வைக்கும் பட்டிமன்றங்கள், மனதை மகிழ்விக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

மேலும் புத்தக நன்கொடை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதோடு தினந்தோறும் 5 பேருக்கு குலுக்கள் முறையில் புத்தகம் பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தவறாது கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post காஞ்சிபுரம் அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் மாபெரும் புத்தகத்திருவிழா: பிப். 9 முதல் 19ம் தேதி வரை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: