வீட்டு வாசலில் கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்ட வாலிபர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி கைது; 2 பேருக்கு வலை

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டு வாசலில் அமர்ந்து கஞ்சா புகைத்ததை தட்டிக்கேட்ட வாலிபர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகரை சேர்ந்தவர் சிவா (34). புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் மனோஜ் (21).

பிரபல ரவுடியான இவர் மீது 9 வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவர், நேற்று இரவு சிவா வீட்டு வாசலில் அமர்ந்து கஞ்சா புகைத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவா, இங்கெல்லாம் கஞ்சா புகைக்கக்கூடாது, எழுந்து செல்லுங்கள் என கூறியுள்ளார். இதனால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த மனோஜ் கண்டபடி திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். சிவாமீது கோபத்தில் இருந்த ரவுடி மனோஜ், கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து அன்று நள்ளிரவு சிவா வீட்டு மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். பயங்கர சத்தம் கேட்டு சிவா வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போதுதான் பெட்ரோல் குண்டுவீசிவிட்டு மனோஜ் உள்ளிட்ட 3 பேர் ஓடியது தெரியவந்தது.

ஆனால், பெட்ரோல் குண்டு வீசியதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் சிவா புகார் கொடுத்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டுவீசி தாக்குதலில் ஈடுபட்ட மனோஜை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பிய கூட்டாளிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வீட்டு வாசலில் கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்ட வாலிபர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி கைது; 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: