நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த ஆனங்கூர் ரயில்வே கேட் வயர் அறுந்ததால் போக்குவரத்து பாதிப்பு: பொதுமக்கள் தவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த ஆனங்கூர் ரயில்வே கேட் பழுதானதால் காலை 11 மணியில் இருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலை முக்கிய சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையில் ஆனங்கூர் கிராம பகுதியில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து சேலம் மார்க்கமாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்வே பாதையில் இது முக்கிய பாதையாகும். இந்த பாதையை தாண்டி தான் திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் வழக்கம் போல் ரயில் செல்வதற்காக அடைக்கப்பட்ட கேட் மீண்டும் திறக்க முயற்சி செய்த போது, எதிர்பாராத விதமாக கேட் வயர் அறுந்து விழுந்துள்ளது. இதனால் ரயில்வே கேட்டை திறக்க முடியாததால் அதிர்ச்சியடைந்த ரயில்வே கேட் கீப்பர், சரி செய்ய முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. ரயில்வே கேட் பழுதானதால் ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

ஆனங்கூர் ரயில்வே கேட் பழுதால் அந்த பகுதியில் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் சேலம் மாவட்டம் சங்ககிரி மார்க்கமாக சென்று மீண்டும் திருச்செங்கோடு சென்று நாமக்கல், சேலம் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 4 மணி நேரமாக ரயில்வே கேட்டை திறக்க முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். பழுதான ரயில்வே கேட்டை விரைந்து சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த ஆனங்கூர் ரயில்வே கேட் வயர் அறுந்ததால் போக்குவரத்து பாதிப்பு: பொதுமக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: