நன்றி என்றால் கிலோ என்ன விலை என கேட்பார் எடப்பாடி: ஓபிஎஸ் கடும் தாக்கு

மன்னார்குடி: ‘நன்றி என்றால் கிலோ என்ன விலை’ என கேட்பவர் தான் எடப்பாடி என்று ஓபிஎஸ் கடுமையாக தாக்கி பேசினார். திருவாரூர் மாவட்ட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் சிவ.நாராயண சாமி தலைமையில் மன்னார்குடியில் நேற்று நடந்தது. வைத்திலிங்கம், பெங்களூரு புகழேந்தி, மனோஜ் தங்க பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு சாதாரண தொண்டனும் போட்டியிடலாம் என எம்ஜிஆர் வழங்கிய உரிமையை பறித்து தொண்டர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என தொண்டர்கள் அவருக்கு வழங்கிய நிரந்தர பதவியை பறித்து ஜெயலலிதாவிற்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. ‘நன்றி என்றால் கிலோ என்ன விலை’ என கேட்பார் எடப்பாடி. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி அவராகவே விலகி விட வேண்டும்.

இல்லையென்றால் மக்களவை தேர்தலுக்கு பிறகு தொண்டர்கள் இணைந்து அவரை தூக்கி எறிவார்கள். தொண்டர்களின் தலைவனாக தன்னை காட்டி கொள்ள முயற்சிக்கும் எடப்பாடி உண்மையிலே தோல்விகளின் தலைவனாகவே உருவெடுத்து உள்ளார். வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தை நயவஞ்சக எண்ணத்தோடு பறித்து கொண்டு கடந்த 9 தேர்தல்களில் போட்டியிட்ட அவர் படுதோல்வி அடைந்ததே மிச்சம்.

மக்களும், கட்சி தொண்டர்களும் அவரை ஏற்கவில்லை. எனவே, வரும் மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மரண அடி கொடுத்து சரியான பாடம் புகட்ட மக்களும், தொண்டர்களும் தயராகி விட்டனர். துரோகத்தின் மறு உருவமான எடப்பாடியின் அரசியல் அஸ்தமனம் துவங்கி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

The post நன்றி என்றால் கிலோ என்ன விலை என கேட்பார் எடப்பாடி: ஓபிஎஸ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: