சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மேல்முறையீட்டு மனு : தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி :சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்த 2006-11ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். 2011ல் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும், பொன்முடிக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. அதில், ‘‘ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வருமானத்துக்கு அதிகமாக ரூ.175 கோடி சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் பொன்முடியின் மனைவி விசாலாட்சியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இருப்பினும் இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக தொடர்ந்துள்ளது என பொன்முடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விரிவாக விசாரணை நடத்திய விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது. சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக 2017ல் லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் குற்றவாளி என உத்தரவிட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் தரப்பில் கடந்த 3ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் மேற்கண்ட இரு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் தாக்கல் செய்த பின்பு உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திவைப்பது குறித்து பார்க்கலாம் என்றும் தெரிவித்து வழக்கு விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மேல்முறையீட்டு மனு : தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: