தமிழக மக்களை ஏமாற்றி தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது : ஜெயக்குமார் கடும் விமர்சனம்

சென்னை : அண்ணாமலை தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி வருவதாக ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை மேற்கொண்டது. இதில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாஜி அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், “பா.ஜ.க.வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. பா.ஜ.க. என்பது கழற்றிவிடப்பட்ட பெட்டி, அதனை மீண்டும் இணைத்துக்கொள்ள மாட்டோம். தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. அண்ணே! அண்ணே! என்று அண்ணாமலை போல் நாங்கள் கூழைகும்பிடு போடுபவர்கள் அல்ல.

கூழை கும்பிடு போட்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி இங்கே கால் ஊன்ற நினைத்தால் அது நடக்காது. தன்னை முன்னிலைப்படுத்தவே அண்ணாமலை பேசி வருகிறார், பாஜகவை முன்னிலைப்படுத்தவில்லை. நடக்காத விஷயத்தை கூறி திசைதிருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார். கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிப்போம். பாஜக கடந்த 10 ஆண்டுகளில் எந்தெந்த மாநிலங்களுக்கு துரோகம் செய்தது என்பதை தேர்தலில் அம்பலப்படுத்துவோம். பாஜகவின் கொத்தடிமை ஓ.பன்னீர்செல்வம் என்பதை நேற்று அவருடைய பேச்சு நிரூபித்துள்ளது. தமிழக மக்களை ஏமாற்றி தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது,”இவ்வாறு பேசினார்.

The post தமிழக மக்களை ஏமாற்றி தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது : ஜெயக்குமார் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: