சபலெங்கா மீண்டும் சாம்பியன்: ஆஸி. ஓபன் டென்னிஸ்

மெல்போர்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்கா தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் சீனாவின் கின்வென் ஸெங்குடன் (21 வயது, 15வது ரேங்க்) நேற்று மோதிய சபலெங்கா (25 வயது, 2வது ரேங்க்) 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை தக்கவைத்தார். இப்போட்டி 1 மணி, 16 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் இணை (2வது ரேங்க்) 7-6 (7-0), 7-5 என்ற நேர் செட்களில் இத்தாலியின் சைமன் போலெல்லி – ஆண்ட்ரியா வவஸோரி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 39 நிமிடத்துக்கு நீடித்தது. இந்த வெற்றியின் மூலம் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தனது முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற போபண்ணா, இன்று வெளியாகும் ஏடிபி இரட்டையர் தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேறுகிறார். இதன் மூலமாக மிக மூத்த வயதில் (43) நம்பர் 1 அந்தஸ்தை வகிக்கும் வீரர், கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற சாதனைகள் போபண்ணா வசமாகியுள்ளது. இது அவர் வென்ற 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். முன்னதாக, 2017ல் கனடாவின் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கியுடன் இணைந்து பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். இன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் பைனலில் இத்தாலியின் யானிக் சின்னர் – டேனியல் மெத்வதேவ் (ரஷ்யா) மோதுகின்றனர்.

 

The post சபலெங்கா மீண்டும் சாம்பியன்: ஆஸி. ஓபன் டென்னிஸ் appeared first on Dinakaran.

Related Stories: