குடியரசு தினவிழாவையொட்டி கிராம சபா கூட்டம்

ராணிப்பேட்டை : வாலாஜா ஒன்றியம் ராணிப்பேட்டை அருகே மாந்தாங்கல் ஊராட்சியில் 75வது குடியரசு தினவிழா முன்னிட்டு கிராம சபா கூட்டம் நேற்று மாந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் ரமா கார்த்திகேயன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பணி மேற்பார்வையாளர் புஷ்பராணி கலந்து கொண்டார். கூட்டத்தில் கிராமத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் செலவினம் மற்றும் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளின் முன்னேற்றம், அது குறித்த செலவீனம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024-25 நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டம், பாரத இயக்கத்தின் சார்பாக முன்மாதிரி கிராமமாக விளங்கி சுகாதார தூய்மை, பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நிலை, திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்துதல் அதனை செயல்படுத்தி கிராம விருது பெற நடவடிக்கைகள்.

அனைத்து குடியிருப்புகளுக்கும் ஜல்ஜீவன் திட்டம் மூலமாக குடிநீர் வழங்கிய விவரம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், போன்றவற்றை விரிவாக ஊராட்சி செயலாளர் போத்ராஜ் பொது மக்களுக்கு விளக்கினார். இதனை தொடர்ந்து தொழு நோய் தடுப்பது குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் எடுத்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த வேப்பூரில் குடியரசு தினத்தினை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நேற்று நடந்தது. வேப்பூர் அடுத்த அசேன்புராவில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரஞ்சித் குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) மற்றும் ஆற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார்.இதில் கிராமத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் செலவினங்கள், ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் அது குறித்த செலவினம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், ஜல் ஜீவன், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

பாணாவரம்: பாணாவரம் அடுத்த எலத்தூர் ஊராட்சியில் மன்ற தலைவர் ஷோபனா வினோத்குமார் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திட்ட குழு உறுப்பினர் சுந்தரம்மாள்பெருமாள் கலந்து கொண்டு பேசினார். அதேபோல் பாணாவரம் ஊராட்சியில் ஆர்சி அர்ஜுனன், ஆயல் ஊராட்சியில் ஆனந்தன், மங்கலம் ஊராட்சியில் யசோதா சேகர் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் குடிநீர், மயான பாதை உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post குடியரசு தினவிழாவையொட்டி கிராம சபா கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: