உயர் நீதிமன்றத்தில் குடியரசு தின விழா பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்து தலைமை நீதிபதி கொடியேற்றினார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்து வந்து தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில் குடியரசு தின விழா நேற்று நடந்தது. இதில், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்து வந்து தேசியக்கொடி ஏற்றிவைத்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் பணி காலத்தை நிறைவு செய்த ஓட்டுனர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட உயர் நீதிமன்ற ஊழியர்களுக்கு தலைமை நீதிபதி, சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் மோப்ப நாய்கள் பல்வேறு சாகசங்களை செய்து அசத்தின. அப்போது பயிற்சி பெற்ற நாய் தலைமை நீதிபதிக்கு பூங்கொத்து வழங்கியது பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியது. தொடர்ந்து, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களும் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி காட்டினர். நிகழ்ச்சியில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மத்திய, மாநில வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் பாஸ்கர், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் நடந்த குடியரசு தின விழாவில், பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

The post உயர் நீதிமன்றத்தில் குடியரசு தின விழா பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்து தலைமை நீதிபதி கொடியேற்றினார் appeared first on Dinakaran.

Related Stories: