கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா: பிப். 6க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பிப்.23ம் தேதி துவங்குகிறது. இந்த விழாவுக்கு செல்லும் பக்தர்கள் பிப்.6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சந்தியாகு தெரிவித்துள்ளார். கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழா வரும் பிப்.23ம் தேதி தொடங்குகிறது. விழாவின் முதல் நாளான பிப்.23 மாலை இந்திய பக்தர்கள், பாதிரியார்கள் தரப்பில் கொடியேற்றம், இரவில் தேர்பவனி ஆகியவை நடைபெறும்.

பிப்.24ம் தேதி அந்தோணியார் ஆலய வளாகத்தில் இலங்கை பக்தர்கள், பாதிரியார்கள் பங்கேற்கும் திருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடைபெறும். இரண்டு நாள் திருவிழாவிலும் இந்திய, இலங்கை பக்தர்கள் 8 ஆயிரம் பேர் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் மாவட்ட அரசு செயலகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பக்தர்கள் கச்சத்தீவு செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு பிப்.23ம் தேதி அதிகாலை 6 மணி முதல் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாக அனுமதி பெற்ற பக்தர்கள் படகில் கச்சத்தீவு செல்லலாம். மறுநாள் காலை 10 மணிக்குள் திருவிழா திருப்பலி பூஜை நிறைவு பெற்று, கச்சத்தீவில் இருந்து படகில் புறப்பட்டு மீண்டும் ராமேஸ்வரம் வர இலங்கை கடற்படை அனுமதி வழங்கியுள்ளது.

அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தங்களது பெயர்களை பிப்.6ம் தேதிக்குள் ராமேஸ்வரம் வேர்க்கோடு புனித ஜோசப் ஆலய நிர்வாகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்திற்கு ரூ.10, படகில் செல்ல கட்டணமாக ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும். இது குறித்து கச்சத்தீவு திருவிழா ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பாதிரியார் சந்தியாகு கூறுகையில், ‘கச்சத்தீவு திருவிழா செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜன.25 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிப்.6க்குள் கொடுக்க வேண்டும். அனுமதி கிடைத்த பக்தர்கள் தடை செய்யப்பட்ட எவ்வித பொருட்களையும் படகில் கொண்டு செல்லக்கூடாது’ என்றார்.

The post கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா: பிப். 6க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: