பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மாநில அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: தனியார் பள்ளி சங்கத்தினர் முடிவு

சென்னை: தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: 2022-23, 2023-24ம் ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி வழங்கிய வகையில் அரசு தரப்பில் இருந்து தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டண பாக்கியை உடனே வழங்க வேண்டும்.

இந்த ஆண்டில் வெறும் ரூ.6 ஆயிரம் மட்டுமே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு வழங்கப்படும் என்ற அரசாணையை திரும்பப் பெற்று, ஒரு மாணவனுக்கு அரசு தரப்பில் எவ்வளவு செலவிடுகிறார்களோ அதையே கல்விக் கட்டணமாக நிர்ணயித்து வழங்க வேண்டும். அனைத்து தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் உடனடி தொடர் தற்காலிக அங்கீகாரத்தை எந்தவித நிபந்தனையும், நிர்பந்தமும் இல்லாமல் அதிகாரிகள் யாரும் லஞ்சம் வாங்காமல் அங்கீகார ஆணையை வழங்க வேண்டும்.

தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கவும், நர்சரி, பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக 8ம் வகுப்பு வரை தரம் உயர்த்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பிப்ரவரி 29ம் தேதி மாநில அளவில் அரசின் கவன ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகள் பங்கேற்க உள்ளன.

The post பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மாநில அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: தனியார் பள்ளி சங்கத்தினர் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: