ஊத்துக்காட்டில் ரூ.75 லட்சம் மதிப்பில் மண்டல மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் கட்டும் பணி: சுந்தர் எம்எல்ஏ அடிக்கல்

வாலாஜாபாத்: ஊத்துக்காடு பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மண்டல மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் கட்டும் பணியினை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மண்டல மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்தது. இதனால், மருந்து மொத்த விநியோகிஸ்தர்கள் மற்றும் மருந்துக்கடை உரிமையாளர்கள் தங்களின் உரிமங்களை புதுப்பிப்பதற்காகவும், மருந்து தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காகவும் நாள்தோறும் சென்னைக்கு வந்து செல்கின்றனர்.

இதனால், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் புதிய அலுவலகம் திறக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தநிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காடு பகுதியில் காஞ்சிபுரம் மண்டல மருந்து உதவி இயக்குநர் அலுவலகம் திறப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கலந்துகொண்டு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார். மேலும், இக்கட்டிடத்தில் செயல்பாடுகள் மற்றும் கட்டிடத்தில் என்னென்ன அலுவலர்கள் செயல்படுவர் என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது, மருந்துத்துறை சார்ந்த அலுவலர்கள், இக்கட்டிடத்தின் வரைபடத்தினை காண்பித்து, எங்கெங்கு என்னென்ன அறைகள் கட்டப்படும் என்பது குறித்து விளக்கி கூறினர்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர், மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குநர் கண்ணன், மருந்துகள் ஆய்வாளர் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சஞ்சய்காந்தி, அமலிசுதாமுனுசாமி, மருந்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஊத்துக்காட்டில் ரூ.75 லட்சம் மதிப்பில் மண்டல மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் கட்டும் பணி: சுந்தர் எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: