ஆஸி. ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜோகோவிச்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீரருமான நோவாக் ஜோகோவிச் தகுதி பெற்றார். 4வது சுற்றில் பிரான்ஸ் வீரர் அட்ரியன் மன்னரினோவுடன் (35 வயது, 19வது ரேங்க்) நேற்று மோதிய ஜோகோவிச் (36 வயது, செர்பியா) அதிரடியாக விளையாடி 6-0, 6-0, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 44 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஆஸி. ஓபனில் அவர் 14வது முறையாக காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். இது அவர் விளையாட உள்ள 58வது கிராண்ட் ஸ்லாம் காலிறுதியாகும்.

ஆஸி. ஓபனில் ஜோகோவிச் 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.மற்றொரு 4வது சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 6-7 (3-7), 7-5, 3-6, 3-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸிடம் தோல்வியைத் தழுவினார். யானிக் சின்னர் (இத்தாலி), ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் போலந்தின் மேக்தலினா ஃபிரெக்கை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். அரினா சபலெங்கா (பெலாரஸ்), பார்போரா கிரெஜ்சிகோவா (செக்.) ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

The post ஆஸி. ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜோகோவிச் appeared first on Dinakaran.

Related Stories: