நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர் பெண்ணையாற்று திருவிழா கோலாகலம்: சுவாமிகளுக்கு தீர்த்தவாரி

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஆற்று திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பொங்கல் பண்டிகையின் 5ம் நாளில் ஆற்று திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து நதிகளிலும் கங்கை நீர் கலப்பதாக ஐதீகம். இதனால் அனைத்து நீர் நிலைகளிலும் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். கடலூர் தென்பெண்ணையாற்றில் நேற்று ஆற்று திருவிழா கொண்டாடப்பட்டது. இதனால் கடலூர் மஞ்சக்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தின்பண்ட கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் கடைகள், பிளாஸ்டிக் கடைகள், ராட்டினங்கள், குறிப்பாக ஆற்று திருவிழாவில் மட்டுமே விற்கப்படும் சிறுவள்ளி கிழங்கு கடைகளும் வைக்கப்பட்டிருந்தன.

வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு, வாகனங்களில் மேளதாளம் முழங்க மஞ்சக்குப்பம் பெண்ணையாற்றுக்கு கொண்டுவரப்பட்டன. அங்கு ஆற்றில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், கடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், குடும்பத்துடன் கலந்துகொண்டு வழிபட்டனர். இதே போல கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்றில் கடலூர் பாடலீஸ்வரர் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த திருவிழாவில் மட்டுமே கிடைக்கும் சுருளி கிழங்கை, ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இங்கு ஏராளமான மக்கள் கூடுவார்கள் என்பதால் கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவின் பேரில் தென்பெண்ணையாற்றின் கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு ஒளிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கி கொண்டே இருந்தனர்.மேலும் கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆற்று திருவிழாவுக்கு வந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர்.

பண்ருட்டி: பண்ருட்டியை அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்று திருவிழாவில், கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து சுவாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் 500க்கும் ேமற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இதேபோல் பண்ருட்டி கெடிலம் ஆற்றிலும் ஆற்று திருவிழாவையொட்டி சுவாமிகள் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் இனிப்பு, கார வகைகள், காய்கறிகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், விவசாய கருவிகள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட தளவாட பொருட்கள், சிறுவள்ளி கிழங்குகள் போன்றவை கடை பரப்பி விற்பனை செய்யப்பட்டன.

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம், மேல்பட்டாம்பாக்கம் ஆகிய பகுதியில் உள்ள பெண்ணையாற்றில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நெல்லிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் உள்ள கோயில்களின் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வாகனங்களில் கொண்டு சென்று தீர்த்தவாரி நடந்தது. நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முள்ளிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் எஸ்பி ராஜாராம் திடீர் ஆய்வு செய்தார்.

* கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு ஒளிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கி கொண்டே இருந்தனர்

The post நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர் பெண்ணையாற்று திருவிழா கோலாகலம்: சுவாமிகளுக்கு தீர்த்தவாரி appeared first on Dinakaran.

Related Stories: