டிடி தமிழ் தொலைக்காட்சியில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேரலையில் ஒளிபரப்பு: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்

சென்னை: சென்னையில் உள்ள தூர்தர்ஷன் கேந்திரா வளாகத்தில் நிருபர்களை சந்தித்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: டிடி பொதிகை புதுப்பொலிவுடன் கொண்டு வரப்படும். முன்பு மக்கள் விரும்பி காணும் ஒளியும் ஒலியும் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் புதிதாக கொண்டுவரப்படும். எச்.டி தொழில்நுட்பத்துடன் டிடி பொதிகை ரூ.40 கோடி செலவில் முற்றிலுமாக மாறுபட்ட புதிய தொழில்நுட்பத்துடன் பல புதிய நிகழ்சியுடன் புதிய வடிவில் கொண்டுவரப்படுகிறது. நம்பகத்தன்மை வாய்ந்த செய்திகள் புதிய வடிவில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படுவது மிகப்பெரிய பாக்கியம். தொடர்ந்து 8 இடங்களில் பண்பலை ஒளிபரப்பு ஜம்மு காஷ்மீரின் ஒளிபரப்பு கோபுரங்கள் அதேபோன்று 12 மாநிலங்களில் 26 ஒளிபரப்பு கோபுரங்கள் உள்ளிட்டவைகளை அடிக்கல் நாட்டி, ரூ.2500 கோடி செலவில் பிரதமர் தொடங்கிவைக்கிறார்.

டிடி தமிழ் தொலைக்காட்சியில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேரலையில் ஒளிபரப்பப்படும். டிடி தமிழ் என்று பெயர் வைத்தது நேரடியாக மக்களுக்கு தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பை சேர்க்கும் வகையில் எளிய மக்களும் புரியும் வகையில் இந்த பெயர் மாற்றப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் அதன் மொழியை சார்ந்துதான் பெயரிடப்பட்டுள்ளது. முக்கியமாக மக்களுக்கு பிரதமரின் அனைத்து திட்டங்களும் கொண்டுபோய் சேரும் வகையில் டிடி தமிழ் மூலமாக கொண்டு சொல்ல உதவும். அனைத்து கலந்த கலவையாக பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post டிடி தமிழ் தொலைக்காட்சியில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேரலையில் ஒளிபரப்பு: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: