அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி தமிழக பாஜவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி அதிமுகவில் இணைந்தார்

சென்னை: அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பாஜ கட்சியில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். பிரபல நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் பல ஆண்டுகளாக பாஜவில் செயல்பட்டு வந்தார். தமிழக பாஜவில் வெளிநாடு மற்றும் பிறமாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராகவும் இருந்து வந்தார். இந்த சூழலில், தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதன் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி, கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாகவும், விசாரணைக்கு வாய்ப்பு கொடுக்காத, பெண்களுக்கு சம உரிமையும் மரியாதையும் கொடுக்காத காரணங்களுக்காக தமிழக பாஜவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார். மேலும், ‘தமிழக பாஜவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என குற்றம் சாட்டியதுடன், சமூக வலைதளங்களில் தமிழக பாஜவையும், மாநில தலைவர் அண்ணாமலையையும் விமர்சித்து வந்தார். இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அலுவலகத்தில் நேற்று சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

இதுகுறித்து காயத்ரி ரகுராம் கூறும்போது, “என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுகவினர் தான். அந்த நன்றியை மறக்க கூடாது என்பதற்காக அதிமுகவில் இணைந்துள்ளேன்” என கூறினார். தமிழகத்தில் பாஜ உடனான கூட்டணில் இருந்து அதிமுக விலகிய பிறகு, தமிழக பாஜவை சேர்ந்த பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பாஜவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி தமிழக பாஜவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி அதிமுகவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Related Stories: