கண்டுகொள்ளாத வேலூர் மாநகராட்சி குப்பை மேடான பாலாற்றுப்படுகை: பொதுமக்கள் வேதனை

வேலூர்: வேலூர் பாலாற்றுப்படுகையில் குப்பைகள் வீசப்பட்டு கொளுத்தப்படுவது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக-ஆந்திர எல்லையில் இருந்து தமிழகத்துக்குள் 222 கி.மீ தூரம் ஓடும் பாலாற்றுப்படுகையில் கடந்த 3 ஆண்டுகளாக ஒரு ஓரமாக சிறிய அளவில் ஓடைபோல தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகள், ரசாயன தொழிற்சாலைகள் கலக்கும் கழிவுநீரை தவிர்த்து மூன்று மாவட்டங்களிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளும் தங்கள் பங்குக்கு கழிவுநீரை மட்டுமின்றி குப்பைகளையும் கொட்டி, பாலாற்றுப்படுகையை குப்பை மேடாக ஆக்கி வைத்துள்ளன.வேலூரில் பாலாற்று பழைய பாலத்தை ஒட்டி இடுகாடு தொடங்கி விருதம்பட்டு வரை இருபக்கமும் குப்பைகளை கொட்டுவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த குப்பை மேடு இன்று காலை தீ வைக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்தது.

இதனால் குப்பையில் வீசப்பட்ட 90 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட மக்கா கழிவுகள் தீயில் எரிந்து பாலாற்று பாலத்தின் வழியாக சென்ற வாகன ஓட்டிகளையும், நடைபயிற்சி மேற்கொண்டவர்களையும் மூச்சுத்திணற செய்தது. இவ்விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத போக்கை கடைபிடிப்பதாக பொதுமக்கள் வேதனைக்குள்ளாகியுள்ளனர். எனவே, பாலாற்றை பாதுகாப்போம் என்று பெயரளவில் மட்டும் கூறிக் கொண்டிருக்காமல், பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், குப்பைகள் கொட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உரிய நடவடிக்கையை மாநகராட்சி எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கண்டுகொள்ளாத வேலூர் மாநகராட்சி குப்பை மேடான பாலாற்றுப்படுகை: பொதுமக்கள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: